audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Monday, January 7, 2019

வாடிக்கையாளர்களை கையாளும் முறை, வேலையாட்கள் செய்ய வேண்டியது செய்ய கூடாதது, கடையை வைத்திருக்கும் முறை, முதலாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்?

வாடிக்கையாளர்களை கையாளும் முறை,
வேலையாட்கள் செய்ய வேண்டியது செய்ய கூடாதது,
கடையை வைத்திருக்கும் முறை, முதலாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்?樂
தீர்வுகள்
ஒரு தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கு மிக மிக முக்கியமானவர்கள் வாடிக்கையாளர்களே.
இங்கு அனைவருமே, யாரோ ஒருவருக்கு வாடிக்கையாளர்களே
அந்த வாடிக்கையாளர்களை திருப்தி செய்வதில்தான் நம் தொழிலின் வெற்றி இருக்கின்றது.
நம்மிடம் தொடர்ந்து வியாபாரம் செய்து கொண்டு இருக்கும் வாடிக்கையான வாடிக்கையாளர்களை, முதலில் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் தேவை. (நாம் நினைக்கிற அப்பாவியின் ரீமேக் அவர்களே
இவர் எப்படியும் நம்மிடம்தான் வாங்குவார்கள் என சிறிது கவனக்குறைவாக இருந்தாலும், நம் தொழிலின் சறுக்கல் ஆரம்பம் ஆகிவிடும்.  எனவே இவர்கள் தான் நம்முடைய மினிமம் கேரண்டி லாபம் கொடுப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அடுத்தது, நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற வாடிக்கையாளர்கள். ரெகுலராக வந்து கொண்டிருந்த ஒரு சில வாடிக்கையாளர்கள் திடீரென வரவில்லை என்றால், நிச்சயம் நம்மீது ஏதோ ஒரு குறையை அவர் கண்டுபிடித்துள்ளார் என்று அர்த்தம்.(புரிஞ்சுக்கிட்டா சரி)
எனவே அவர் நம்மை விட்டு விலகியது ஏன் என்பதை கண்டறிந்து, அந்த குறையை நிவர்த்தி செய்ததை அவரிடமே தெரிவித்து, மீண்டும் அந்த வாடிக்கையாளரை கவர்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
சில வாடிக்கையாளர்கள் நம்மிடம் உள்ள குறையை நேரில் நம்மிடமே கூறி அதை சரிசெய்ய சொல்வார்கள். இவர்கள் ஒரு ரகம்.
இன்னொரு ரகம், நம்மிடம் ஏதாவது குறை இருந்தால், நம்மிடம் வருவதை குறைத்துக் கொள்வார்கள் அல்லது நிறுத்திக் கொள்வார்கள். உடனே நாம் சுதாரித்து, நம் குறையை சரிசெய்ய வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தானே, போனால் போகட்டும் என்று கவனக்குறைவாக இருந்துவிட்டால், நமது தொழிலுக்கு இறங்குமுகம் தான்.
நம்மிடம் உள்ள ஒரு நல்ல விஷயம் எப்படி புதுவகை வாடிக்கையாளர்களை நமக்கு கொடுக்கின்றதோ, அதே போல நம்மிடம் உள்ள ஒரு குறை, நமது ரெகுலரான வாடிக்கையாளர் பலரையும் நம்மை விட்டு நீங்கச் செய்துவிடும்.
வாடிக்கையாளர்கள் நம்மை இன்னும் தெரியாதவர்கள். புதுவகை விளம்பரங்கள் மூலம் தான் இவர்களை கவர வேண்டும். வாடிக்கையாளர்களை நம்மை நோக்கி இழுப்பது சாதாரணமான காரியம் இல்லை. அவர் வேறு ஏதாவது ஒரு கடையில் ரெகுலர் வாடிக்கையாளராக இருப்பார். ஏதாவது ஒரு முக்கிய பொருள், அவர் ரெகுலராக வாங்கும் கடையில் இல்லாத போது, அவர் நம்மை தேடி வருவார். அந்த நேரம் தான் நமக்கு சரியான நேரம், அவர் கேட்கும் பொருளை அவர் எதிர்பார்க்காத விலையில் கொடுத்து அசத்த வேண்டும். அப்போதுதான், வேறு பொருட்களையும் அவரை வாங்கச் செய்ய  முடியும்.
முக்கியமாக தொழில் செய்பவர்களுக்கு பொறுமை, இனிய புன்னகையான முகமலர்ச்சி அவசியம். சிலர் கடைகளில் வியாபாரம் செய்யும் போது எப்போதும் கடுகடுத்த முகத்தோடு இருப்பார்கள். வாங்கினால் வாங்கு, வாங்காவிட்டால் போ என துரத்துவார்கள். வாடிக்கையாளர்களை எப்போதும் வாடிக்கையாளர்களாக பார்க்காமல் ஒரு முதலாளிக்கு கொடுக்கும் மதிப்பையும், மரியாதையையும் கொடுத்தால், எத்தனை போட்டியாளர்கள் வந்தாலும் நம் வியாபாரத்தை யாராலும், அசைக்க முடியாது.
இதை பற்றி இன்னும் உள்ள போய் பாக்கலாம்.
மேலோட்டமாக பார்த்தால் இவ்வளவு தான அப்படின்னு போயிரும்
வாடிக்கையாளர்களை கையாளும் முறைகள்
வாடிக்கையாளர்கள்தான் நமது நிறுவனத்தின் கடவுள்கள் என்பதை முதலில் மனதில் கொள்ள வேண்டும். (கொஞ்சம் ஓவராதான்  போறமோ? போவோம், போவோம்).
சிரித்த முகத்துடன் வாங்க என்று அழைக்க வேண்டும் (கடைக்காரரே என்ன குளோசப் விளம்பரத்துக்கு போறீங்களா? இப்படி பல்ல காட்றீங்க)
கண்டிப்பாக அக்கா, அண்ணன் என்று அழைக்க கூடாது, வாங்க சார் வாங்க மேடம், என்றுதான் அழைக்க வேண்டும், வாடிக்கையாளர் ஏழை பணக்காரன் என்று எல்லாரும் வருவார்கள். அவர்களை உடை நாகரீகம் பார்த்து கையாள கூடாது, நாம் அனைத்து வாடிக்கையாளர்களையுமே வாங்க சார் வாங்க மேடம் என்றுதான் அழைக்க வேண்டும் (சார் மேடம்னு சொன்னா, அவங்களுக்கே கிளுகிளுப்பா இருக்கும்
வாங்க சார் மேடம் என்று அழைப்பதால் அனைத்து தரப்பு ஏழை நடுத்தர வசதி படைத்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் நம்மை சார் மேடம் என்று அழைக்கிறார்கள் என்று முதல் ஆத்ம திருப்தி ஏற்படும் (ஆமா குழந்தைகள் வந்தால் எப்படி சின்ன சார் சின்ன மேடம் அப்படி.
கட்டாயம் அவர்கள் வாங்க விரும்பும் பொருள்களை டேஸ்ட் கொடுக்க வேண்டும், குறிப்பாக அவர்கள் கூட்டி வரும் குழந்தைக்கு கொடுக்க வேண்டும். (எலி மருந்து கேட்டா என்ன செய்வது)
வயதில் சிறிய வாடிக்கையாளர் குழந்தையாக இருந்தாலும், வாங்க போங்க என்றுதான் அழைக்க வேண்டும்.(அவ்வ்...)
குழந்தைகள்தான் இனிப்பு கார உலகின் கடவுள்கள்,  குழந்தைகளைத்தான் அதிக ஆசையை தூண்டும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும். (அய்யயோ புரிஞ்சுக்கோங்க. இப்ப இருக்கிற குழந்தை அப்படி இல்லை)
அதிகமான பேர் காரம் இனிப்பு வாங்க அவர்களின் குழந்தைகள்தான் காரணம்.
குழந்தைகள் கடைக்கு வந்தால் கண்டிப்பாக மேற் சொன்ன கட்டளைகளை பின் பற்ற வேண்டும் (be careful)
வாடிக்கையாளர்களைபார்த்தால் வசதி படைத்தவர், ஏழை என்று கணித்து விடலாம், வசதி படைத்த வாடிக்கையாளர்களிடம், என்ன வேண்டும்? எவ்வளவு வேண்டும்? என்று கூற வேண்டும், அவர் விலை கேட்டால் விலை கூற வேண்டும். விலையை முந்தி கொண்டு கூற கூடாது, நம்ம எப்படியும் வாங்க போறோம், இவன் விலை சொல்லி காட்டுறானேன்னு நெனைப்பாங்க. (இதெல்லாம் தெரியாம நம்ம இத்தன நாள் வெகுளியா இருந்துட்டோமே...)
அதே கொஞ்சம் ஏழை நடுத்தர வாடிக்கையாளர்களிடம் என்ன பொருள் எவ்வளவு என்று கேட்ட உடனேயே விலை சொல்லி விட வேண்டும், அவர்கள் கணித்து வந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப விற்பனை செய்ய வசதியாக இருக்கும், ஏழை  நடுத்தர வாடிக்கையாளர்களிடம் விலைய முன் சொல்ல வில்லை என்றால், விலை அதிகம் என்று வாங்கிய பொருளை திருப்பி தந்து விடுவார்கள்)
கஸ்டமர் அனைவரும் பாரிஸ் லண்டனில் இருப்பவர்கள் இல்லை, அனைவரும் ஊரக பின்புலத்தை கொண்டவர்கள், அவர்களுக்கு ஜிஎஸ்டி விலை பற்றிய புரிதல் இருக்காது, விலை அதிகம், வரி அதிகம் என்று சத்தம் போடுவார்கள், வேலை செய்பவர்கள் கோபப் படவே கூடாது. சிறு புன்னைகயுடன் கருணை வர வைக்கும் முகத்துடன், எந்த தயவும் இன்றி முதல் வார்த்தை சாரி அல்லது மன்னிப்பு கேட்டு விட்டு, ஜிஎஸ்டி பற்றி புரிய வைக்க வேண்டும். (இப்பவே கண்ணுகட்டுதே)
கஸ்டமர் பொருளை வாங்கி கொண்டு செல்லும் போது, தாங்யூ சார், மீண்டும் வருக சார், என்று வெட்க படாமல், வேறுபாடு இல்லாமல் கூற வேண்டும்
கடைக்குள் கஸ்டமர்கள் வந்த உடன், தற்பொழுது வெயில். பலர் சூட்டில் வருவார்கள் வந்தவுடன் காத்து ஓட்டமாக நிற்க ஆசை படுவார்கள், காத்தாடி ஓடுகிறதா? ஓடவில்லை என்றால் ஓடி போய் அதை போட்டு விட வேண்டும், மழை குளிர் காலங்களில் அவர்களிடம் கேட்டு அவர்கள் அமர்ந்து நிற்க்கும் இடத்தில் உள்ள காத்தாடியை அனைக்க வேண்டும். (பெட்டிகடைல என்னப்பா பண்றது?)
தண்ணீர் கண்டிப்பாக இருக்க வேண்டும், கஸ்டமர் கடைக்கு வரும் முன்னரும், பின்னரும் நிறைய பேர் தண்ணீர் குடிப்பார்கள். தண்ணீர் ஸ்டாக்கை கவனித்து ஊற்றி கொண்டே இருக்க வேண்டும். (எந்த தண்ணிய சொல்றீங்க. அய்யோ நம்ம வாய் வேற)
கஸ்டமர் நிற்கும் பொழுது, வேலையாட்கள் பர்சனலாக சத்தமாக பேசி கொள்ள கூடாது, பர்சனல் விசயங்கள் எல்லாம் உள் அறைக்குள் பேசி கொள்ள வேண்டும். (அரட்டைலாம் உள்ளேதான் வச்சிக்கணும்)
கஸ்டமர்கள் தரத்தைத்தான் எதிர் பார்ப்பார்கள், தலையில் கட்டாயம் கேப், கையில் கட்டாயம் குளோஸ் அணிந்து தான், ஒவ்வொரு பொருளையும் தொட வேண்டும். கஸ்டமர்கள் முன்பு, எந்த பொருளையும் குளோஸ் இல்லாமல் தொட கூடாது (நாங்க ஆப்ரேஷன் தியேட்டர்லயா இருக்கோம், தொப்பி கையுறை போடுறதுக்கு)
டிஸ்பிளே கிளாஸ் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், கஸ்டமர் வந்த உடன் அதுதான் முதல் பார்வை, எனவே கஸ்டமர் வந்து கை வைத்தால் கண்ணாடி பூத்து, வெள்ளழுக்கு படும். கஸ்டமர் சென்ற உடன், உடனேயே அடிக்கடி அதை துடைக்க வேண்டும்
வேலையாட்கள் கடை பிடிக்க வேண்டிய கட்டாய நடைமுறைகள் :
வேலையாட்கள் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும், எந்த மற்ற கோபம் வர அளவுக்கு, அதிகமான சிரிப்பு இல்லாமல் சிறு புன்னகையுடன் இருக்க வேண்டும். (சிரிச்சுகிட்டே இருந்தா பைத்தியம்ன்னு சொல்லுவாங்க பாஸ்)
தலையில் கேப், கையில் குளோஸ் இல்லாமல் புட்டிங் ஏரியாவுக்குள் இருக்க கூடாது, கேப் குளோஸ் அணிந்தே இருக்க வேண்டும்
கையில் நகம் அறவே இருக்க கூடாது
தன் மத சார்ந்த எந்த அடையாளமும் இருக்க கூடாது எந்த மத வேலையாட்களாக இருந்தாலும், திருநீரூ பூசி இருப்பது குங்குமத்தை பூசி இருப்பது கூடாது, காற்றில் உணவு பொருட்களில் விழும் எனவே எந்த மத அடையாளத்தையும் கஸ்டமர்களிடம் வேலையாட்கள் காட்டி கொள்ளவே கூடாது, கஸ்டமர்கள் கிறிஸ்துவர்கள், இசுலாமியர்கள் என்று சில கோட்பாடுகளுடன் வருவார்கள், எனவே அதை வேலையாட்கள் சில பல விசயங்களை அறை உள் அறைகளில் விட்டு விட வேண்டும், கையில் கயிர் கட்டி இருப்பது கூடாது, ஒரு வேலை கட்டி இருந்தால், கை பகுதியில் படாமல் இருக்கும்வாறு ஏத்தி கட்டி இருக்க வேண்டும், பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்து கொள்ளலாம் (ரொம்ப பெரிய மனசு)
பார்லரில் இருக்கும் அனைத்து பொருள்களின் பெயரும், விலைகளின் பெயரும் தெரிந்திருக்க வேண்டும்)
கஸ்டமரை முதலில் எவர் பார்க்கிறாரோ, அவர் வரவேற்க வேண்டும், அவன் வரவேற்கட்டும் இவன் வரவேற்கட்டும்னு இருக்க கூடாது, அப்பொழுது வேறு வேறு வேலையை பார்த்து கொண்டு இருப்பார்கள், எனவே கஸ்டமரை முதலில் பார்ப்பவர் கட்டாயம் வரவேற்க்க வேண்டும் (வாங்க சார், வாங்க சார்...)
கஸ்டமர் வந்து எந்த ஸ்டேசனில் நிற்கிறாரோ, அந்த ஸ்டேசன் லேபரிடம் முதலில் பார்த்தவர் கஸ்டமர் நிக்குறாங்க பாருனு சொல்லனும், ஏன்னா அந்த ஸ்டேசன் வேலையாள் வேறு வேலை ஏதாவது செய்து கொண்டு இருப்பார், இல்லை கீழே குனிந்து, அமர்ந்து இருப்பார்
கஸ்டமருக்கு முன்னால் கையை வாயில் வைப்பது, மூக்கில் கை வைப்பதை, கண்ட இடங்களில் கை வைக்க கூடாது (செல்லாது, செல்லாது)
கஸ்டமருக்கு முன் எந்த பொருளையும் வெறும் கையால் தொட கூடாது, கஸ்டமருக்கு முன் எந்த பொருளையும் திங்க கூடாது. அப்படி திங்க வேண்டும என்றால், கஸ்டமர் கண்ணில் பாடாதவாறு, கஸ்டமர் இல்லாத போது, பொருளை எடுத்து உள் அறையில் வைத்து கொண்டு உண்ணுங்கள (எனக்கு கொஞ்சம் குடுங்கன்னு கேப்பாங்க).
கஸ்டமருக்கு முன் வேலையாட்கள், சக வேலையாட்களை மாமா மாப்ளே என்று அழைக்க கூடாது, அண்ணன், தம்பி என்பது கூட சக வேலையாட்களை அழைக்கலாம், கஸ்டமர் முன்பு சக வேலையாட்களை நட்பின் காரணமாகவோ, இல்லை உறவு முறை காரணமாகவோ, மாமா மாப்ளௌ என்று அழைக்கவே கூடாது, வயதில் சிறிய வேலையாட்களாக இருந்தால் வா போ  என்றும், பெரியவர்களாக இருந்தால் வாங்க போங்க என்று அழைத்து, பொருள் விலை, சம்பந்தமாகத்தான் பேச வேண்டும்
வேலையாள் தவறு செய்தால் கஸ்டமருக்கு முன் திட்ட கூடாது, கஸ்டமரிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பிய உடன் உள் அறையில் வைத்து திட்ட வேண்டும் (உள்ள கூட்டிட்டு போயி குமுறுகுமுறுனு குமுறுங்க)
வேலையாட்களுக்குள் நக்கல் நையாண்டி, நகைச்சுவை எல்லாம், உள் அறை்குள் தான் இருக்க வேண்டும்
வேலையாட்கள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும், தாடியும் தம்பட்டையுமாக இருக்க கூடாது, மூன்று நாளைக்கு ஒருமுறையாவது கிளீன் சேவ் செய்ய வேண்டும், இல்லை ஐந்து நாள் கூட சரிதான், வளர்ந்த தாடியை தடவினால் முடி கொட்டும் அதை தவிர்க்கவே, 3,5 நாளுக்கு ஒரு முறை சேவ் செய்ய வேண்டும்
கழிவறை, எதற்க்கு சென்றாலும், வரும்போது கையை அதற்கான கெமிக்கல் பயன்படுத்தி கையை நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்
கையை அடிக்கடி கழுவ வேண்டும், புட்டீங் ஏரியாவை விட்டு, வெளியே சென்று, சுவரை தொடுவோம், நோட் பேனா எல்லாவற்றிலும் கிருமி இருக்கும். எனவே கையை சுத்தமாக கழுவுதல் நல்லது
கல்லாவில் இருப்பவர் தயவுசெய்து உணவுப்பொருளில் கை வைக்கக்கூடாது, ஏன் என்றால், சில்லரை காசுகள், நோட்டு  காசுகளே அதிக கிருமிகளை கடத்தும், கழிவறை கூடங்கள், பிச்சைகாரன் தட்டுகள், பிணத்தின் காசுகள் சவ காசுகள் என்று பலரிடமும் இருந்து வரும், எனவே கிரீமிகள் எளிதில் பரவும், உணவு கெடும் எனவே கல்லாவில் இருப்பவர்கள் கையை கழுவி பிறகுதான் உணவை தொட வேண்டும்.பொருள்கள் அனைத்தையும் மூடியே வைத்திருக்க வேண்டும்.
இதை அனைத்தையும் தாரக மந்திரமாக வேலையாட்கள் கடைபிடித்தால், நிறுவனம் சிறப்பான இடத்தை மக்கள் மனதில் பெறும், தரமான பொருள்களை தரமாக தருகிறோம் என்ற சிறப்பான நற்பெயரை பெறும்
கடையை வைத்திருக்கும் முறை :
கடைக்கு  கண் கவர்ச்சி, மிக மிக தேவை கடை எப்போதும் கஸ்டமர் பார்வைபடும்படி இருக்க வேண்டும், எப்போதும் புதிது போலவே தோற்றமளிக்க வேண்டும், நாம் நிறைய ஹோட்டல்கள் பார்த்திருப்போம். அனைத்துமே மாறி மாறி போய் இருக்கும், அதற்கு காரணம் பழசு போல் பார்வை படும். அதனாலயே பல ஹோட்டல்கள் காணாமல் போய் இருக்கும், எனவே கடையின் உள்ளும் வெளியிலும் எப்பொழுதுமே சுத்தமாக புதிது போல் பேண வேண்டும்
கஸ்டமர் கண்ணில் படும்படி எந்த மத அடையாளங்களும், குறிப்பாக பேக்கரி போல் உணவகங்களில் அதை பின்பற்ற கூடாது, கடவுள் போட்டோக்களும் இருக்க கூடாது, கஸ்டமர்கள் முஸ்லீம், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என்று வருவார்கள். கடவுளுக்கு முன்பு நெய்வேத்தியம் பண்ணுவது போல், பலகாரங்கள் சாம்பிராணி, சூடம் அகல்விளக்கு, இது எல்லாம் இருப்பது, அவர்களுக்கு மன சங்கடத்தை தரும். எனவே அதை தவிர்ப்பது நலம். அதே போலவே பார்லருக்குள் எந்த மதத்தை பின்பற்றினாலும், மத நம்பிக்கை கடவுள் போட்டோக்களை கஸ்டமர் பார்வைகளில் வைக்க கூடாது. உள் அறைக்குள் வைத்து பூஜை புணஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
ஹட்சன் குழுமம் தமிழகத்தை சேர்ந்த சந்திர மோகன் குழுமம் அவர்களுடையது தான். ஆரோக்கியா, ஹட்சன், அருண் ஐஸ்கிரீம், ஐபாக்கோ எல்லாக், அவர்கள் ஆச்சாரமான இந்து. ஆனால் எந்த ஒரு சின்ன கடையிலும் பார்லர்களிலும், மத நம்பிக்கை கடவுள் போட்டோக்களை முன்பு கஸ்டமர் பார்வையில் வைத்தது இல்லை. அனைத்து தரப்பு மக்களும் ஹட்சனை ஆதரிக்க இது மிக முக்கிய காரணம்.
அனைத்து பொருளுக்கும் நேம் டேக் இருக்க வேண்டும். நேம் பொருள் இருந்து நேம் டேக் இல்லை என்றால், வெண்மையான தாளில் டார்க்கான ஸ்கெட்சில் எழுதி ஒட்ட வேண்டும் நேம் டேக் வரும் வரை, நேம் டேக் இருந்து பொருள் நம்மிடம் இல்லை என்றால், அந்த ட்ரேயில் வேறு ஒரு பொருள் வைப்பாம், எனவே அந்த பழைய நேம் டேக்கை எடுத்து விட்டு, என்ன பொருளோ, அந்த பொருளை வைத்து அதற்க்கு உண்டான நேம் டேக்கை வைக்க வேண்டும்.
கண்ணாடிகள், பொருள் இருக்கும் பாக்ஸ், உக்காரும் சேர் டேபில், பக்க சுவர்கள் சுத்தமாகவும் புதிது போலவும் வைத்திருக்க வேண்டும்
அடிக்கடி எம்டி, மாப் போட்டு, தண்ணி மாப் போட்டு, தரையை சுத்த படுத்தி கொண்டே இருக்க வேண்டும். குறிப்பாக கஸ்டமர் இல்லாத போது (note this point).
எந்த பொருளையும் நம்மிடம் இல்லை என்றால் அந்த  பொருள் இப்போதான் முடிஞ்சுச்சு, வேறு பொருள் அது ரிலேட்டடா சஜசன் பண்ணனும். இல்லாத பொருள் எப்போது வரும் என்பதை கஸ்டமரிடம் கூற வேண்டும்
அனைவரும், குழுவாக இருக்க வேண்டும். காலையிலேயே ஒரு டார்கெட், முதல் நாள்  செய்த தவறு, நல்லதுகளை பேசி, அதை இந்த நாளில் கடை பிடிக்க வேண்டும், தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும்.
காத்தாடிகள், லைட்டுகள்  பார்லருக்குள் ஓடி கொண்டே எரிந்து கொண்டே இருக்க வேண்டும்
தினம் தினம் சுத்த படுத்துவது, மணிக்கு ஒரு முறை சுத்த படுத்துவது, வாரத்திற்க்கு இரண்டுமுறை சுத்த படுத்துவது, வாரத்திற்க்கு ஒருமுறை சுத்தபடுத்துவது, மாதத்திற்க்கு ஒரு முறை சுத்தபடுத்தும் பொருட்களை வகைபடுத்தி, கட்டாயம் சுத்தபடுத்தி கொண்டே இருக்க வேண்டும். கடை புதிது போலவே இருக்கும். என்னென்ன கெமிக்கல் எது? எதற்க்கு? பயன்படுத்தி துடைக்க வேண்டும், என்றும் தெரிந்திருக்க வேண்டும்.
முதலாளி கடைபிடிக்க வேண்டியவை :
எங்க முதலாளி நல்ல முதலாளி வெள்ள மனம் நல்ல உள்ளம் கொண்ட முதலாளி இப்படி பாடனும்னு எல்லாருக்கும் ஆசை இருக்கும். ஆனா நம்ம முதலாளி இப்படி பாடுற மாதிரியா நடந்துக்குவாங்க.
முதலாளி என்பவர் தொழிலாளி கிட்ட அன்பா நடந்துக்கனும்
தொழிலாளிக்கு ஒரு கஷ்டம்னா, அந்த கஷ்டத்துல பங்கு எடுத்து, அத தீர்த்து வைக்கனும்
நான் முதலாளி, நீ எங்கிட்ட சம்பளம் வாங்கி வேலை செய்ற தொழிலாளி என்ற எண்ணம் வரக்கூடாது.
முதலாளி தொழிலாளிகிட்ட சகஜாம பழகணும்.
முதலாளி என்பவர் தொழிலாளியையும், தனது நிறுவனத்தையும், சரியான முறையில் நடத்தி செல்ல வேண்டும்
தனக்கு கிடைக்கும் லாபத்தில் தொழிலாளிக்கும் சிறிய தொகை தர வேண்டும்.
தொழிலாளிக்கும் குடும்பம் குழந்தைகள் உண்டு என்று எண்ண வேண்டும்.
சிரிச்ச முகத்தோட இருக்கனும். சிடுசிடுன்னு இருக்க கூடாது.
சம்பளம் கரெக்டா குடுக்கணும். கரடுமுரடா குடுக்கக் கூடாது.
தொழிலாளி வருவதற்கு முன் வரவேண்டும். அவர்கள் சென்றவுடன் செல்ல வேண்டும்.
முதலாளி திட்டம் தீட்ரவரா இருக்கணும். திட்டிதிட்டி தீர்ப்பவரா இருக்கக் கூடாது.
அனைத்து தொழிலாளர்கள் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்பவரே சிறந்த முதலாளியாக இருக்க முடியும்.
கருத்து,
சொல்லியே ஆகணும்ப்பா? என்ன சொல்றது? என்ன என்னத்த சொல்றது
முதலாளி நல்லா இருந்தா தொழிலாளி நல்லா இருப்பாங்க, தொழிலாளி நல்லா இருந்தா, முதலாளி நல்லா இருப்பாங்க. இருவரும் நாணயத்தில் உள்ள இருபக்கமும் போல. ஒண்ணு இல்லாம மற்றொன்று இல்லை.
அதேபோல் கடைக்காரர் தன்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களை, ஏமாற்றக்கூடாது.


ஒரு குட்டிக்கதை

கிராமத்தில் இருந்து வரும் பெரியவர் தன்னிடம் உள்ள முருங்கையை கொடுத்து, அதற்கு பதிலாக பருப்பு வாங்கி கொண்டு செல்வார்.
அதாவது 10 கிலோ முருங்கை குடுத்து, 10 கிலோ பருப்பு வாங்கிச் செல்வார்...
ஒரு நாள் கடைக்காரருக்கு சந்தேகம் வந்தது. அந்த முருங்கை காயை எடை போட்டு பார்த்தார். 9 கிலோ தான் இருந்தது.கடைகாரருக்கு பயங்கர கோவம். இப்படி தான் என்னை ஏமாற்றுகிறாரா என்று.பெரியவர் வந்தவுடன் எதுவும் சொல்லாமல் எதுக்கு இப்படி ஏமாத்துன என்று கூறி திட்டி, பெரியவரை அடித்தும் விட்டார்.அந்த பெரியவர் என்னான்னு சொல்லுங்க. சொன்னாத்தானே தெரியும், என்று கடைகாரரிடம் கேட்டார். அந்த கடைக்காரர் என்னிடம் நீ 10 கிலோ பருப்பு வாங்கி கொண்டு, 9 கிலோ முருங்கையை கொடுத்து ஏமாத்தி இருக்கிறீர் என்றார்.அதற்கு அந்த பெரியவர் ஐயா என்னிடம் தராசு கிடையாது நீங்கள் குடுத்த 10 கிலோ பருப்பை வைத்துத்தான் நான் முருங்கையை எடை போடுவேன் இதில் என்னுடைய தவறு கிடையாது. நான் நேர்மையா தான் இருக்கிறேன், என்று கூறி சென்று விட்டார். அப்போது தான் கடைக்காரர் தன் தவறை உணர்ந்தார். 
ஏமாற்றியது பெரியவர் அல்ல, 
கடைக்காரர் இந்த மாதிரி கடைக்காரர் ஏமாத்தாம, தன்கிட்ட வாடிக்கையாளர்கிட்ட நேர்மையா, எடை போட்டு குடுத்தாலே போதுங்க. 
வேற ஒன்றும் பண்ண வேண்டாம்*

அவனவன் எண்ணம் போலவே முதலாளி, தொழிலாளி, வேலையாட்கள்,  வாடிக்கையாளர்கள் அனுபவிப்பார்கள்.

No comments:

Post a Comment