audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, October 20, 2016

'காமிக் புத்தக தினம்



இருபது வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் முதல் வளரிளம் பருவத்தினர் பலரின் வாழ்வை சுவாரசியமாக்கியதில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. பின்னே... விடிய விடிய புத்தகத்தைக் கையில் வெச்சு வாசிச்சுக்கிட்டு இருந்தா...

அவ்வளவு சுவாரசியமான வாசிப்பனுபவம் தந்த காமிக்ஸ் புத்தகங்களைக் கொண்டாடும் விதமாக September 26, 'காமிக் புத்தக தினம்' கொண்டாடப்படுகிறது.




காமிக் தினம் கொண்டாடும் பழக்கம் எப்படி, யார் மூலம் ஏற்பட்டது என்பது பற்றிய தகவல் அறிய, கூகுளில் வலைவீசித் தேடியதில் 'கடல்லயே இல்லயாம்!' என்றுதான் பதில் வருகிறது. காமிக்ஸ் வரலாற்றைப் புரட்டினால், 1842-ம் ஆண்டு முதல் காமிக்ஸ் புத்தகத்தின் சுவடுகள் இருந்தாலும் 1933-ம் ஆண்டு வெளியான 'ஃபேமஸ் ஃபன்னீஸ்' புத்தகம்தான் முழுமையான முதல் காமிக்ஸ் புத்தகமாகக் கருதப்படுகிறது.




இருபது ஆண்டுகளுக்கு முன்புவரை வாசிப்புப் பழக்கத்தின் ஆரம்பமாக சித்திரக் கதைகள்தான் இருக்கும். அதில் தொடங்கும் வாசிப்புப் பழக்கமானது படிப்படியாகக் கடந்து நாவல்கள் வரை வந்து நிற்கும். இதுதான் அடிப்படை. வெளிநாடுகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றும் காமிக்ஸ் புத்தகங்களை விரும்பிப் படிக்கிறார்கள். சொல்லப்போனால் காமிக்ஸ் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது. பல ஆண்டுகளாக சினிமா உலகில் கொடிகட்டிப்பறந்து தயாரிப்பாளர்களுக்குக் கோடிக்கணக்கில் லாபமளித்த சூப்பர் ஹீரோக்களான சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன், அயர்ன்மேன், அவெஞ்சர்ஸ் அனைவருமே முதன்முதலில் காமிக்ஸ் கதாபாத்திரங்களாகத்தான் மக்களிடம் அறிமுகமானவர்கள்.




தமிழைப் பொறுத்தவரை காமிக்ஸ் உலகின் முடிசூடா மன்னன் என்றால் அது 'இரும்புக்கை மாயாவி' தான். இந்தக் கதாபாத்திரத்தின் சாகசங்கள் அடங்கிய புத்தகத்தைப் படிக்காத காமிக்ஸ் விரும்பிகளே இல்லை எனலாம். டெக்ஸ் வில்லர் உட்பட உலகம் முழுவதும் உள்ள காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களில் பெரும்பாலானோர் தமிழுக்கு (மொழிபெயர்க்கப்பட்டு) வந்துவிட்டார்கள். இன்றைய தமிழ்ச்சூழலில் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் மற்றும் ராணி காமிக்ஸ் போன்ற பதிப்பகங்கள் மட்டும் இன்னும் காமிக்ஸ் புத்தகங்களைப் பதிப்பித்துக்கொண்டிருக்கின்றன.




மக்களிடத்தில் வாசிப்புப் பழக்கமே குறைந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு வந்துகொண்டிருந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை புத்தகக் கண்காட்சியில் காமிக்ஸ் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதுநாள்வரை ஏங்கிக்கிடந்த காமிக்ஸ் ரசிகர்களும், தங்கள் குழந்தைகளுக்காக பெற்றோர்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கியதில் அத்தனையும் விற்றுத் தீர்ந்தன. இந்த மவுசு காரணமாக அதைத்தொடர்ந்து வருடா வருடம் இப்புத்தகங்கள் விற்பனைக்கு வந்தும், விற்பனையாகிக்கொண்டும் இருக்கின்றன என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம்.




காமிக்ஸ் படிச்சா குழந்தைங்களோட படிப்பு கெட்டுப்போகுமே என வருத்தப்படும் பெற்றோரா நீங்கள்? உண்மையில் காமிக்ஸ் வாசிக்கும் பழக்கம் குழந்தைகளின் கற்பனைவளத்தை அதிகரிக்கிறதென நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். உதாரணத்துக்கு, காமிக்ஸ் வாசிக்கும்போது கதையில் வரும் ஒரு கதாபாத்திரத்தின் வசனத்தையும், படத்தையும் இணைத்து தங்கள் மனதிற்குள்ளாகவே அந்தக் காட்சியைக் கற்பனையாக உருவாக்குவார்கள். இவ்வாறு அவர்களின் கற்பனைத்திறனும், சிந்தனை ஆற்றலும் தூண்டப்படும். இந்த கற்பனைத்திறனானது அவர்கள் உடன் வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கே தெரியாமல் பயணிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.




காமிக்ஸ் விரும்பிகள் அனைவருக்கும் இந்த தினத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதுவரை அதெல்லாம் வாசிச்சதில்லையே பாஸ் என்போர்கள்,

அடுத்து எங்காவது காமிக்ஸ் புத்தகத்தைக் கண்டால் உடனடியாக வாங்கிப் படித்துப் பாருங்கள்.


உங்களையே மறக்கச் செய்துவிடும் சுவாரசியமான தனி உலகம் பாஸ் அது!

No comments:

Post a Comment