சர்வாதிகாரம் மிக மோசமானதென்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.
வன்முறையையும், அடக்குமுறையையும் ஆயுதங்களாகக் கொண்ட சர்வாதிகாரத்தை யாராலும் எளிதில் இனங்காண முடியும். ஆனால் ஜனநாயகத்தின் போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் சாத்வீக சர்வாதிகாரம் மிக மோசமானதென்பதைப் புரிந்து கொள்ள மக்கள் அதிக காலத்தை எடுத்துக் கொள்வர்.
ஆனால் அதனை மக்கள் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வரும் போது, சாத்வீக சர்வாதிகாரம் தன்னிலை மறக்கும் அதீத போதைக்கு ஆட்பட்டிருக்கும்.
உங்களை நீங்களே இன்றியமையாதவராகக் கருதுவதுதான்.
சாத்வீக சர்வாதிகாரம் உங்களை நிச்சயம் அந்த இடத்துக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.
சாத்வீக சர்வாதிகாரிகள், சாத்வீகத்தை தமது சர்வாதிகாரத்துக்கான கருவியாக எடுத்திருப்பது அவர்கள் சாத்வீகத்தை நேசிக்கிறார்கள் என்பதனால் அல்ல. மாற்றமாக, வன்முறையைப் பிரயோகிக்கும் இடத்தில் அவர்கள் இல்லை என்பதனால் மட்டும்தான். வன்முறையைப் பிரயோகிக்கும் அதிகாரம் மட்டும் அவர்களுக்கிருந்தால், உலகின் மிக மோசமான சர்வாதிகாரிகளின் பட்டியலில் அவர்களுக்கும் இடம் கிடைக்கும். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாததன் காரணமாக, அவர்கள் மானசீக வன்முறையை பெரும் ஆயுதமாகப் பயன்படுத்துவர். கையை வைக்காத வரையில் எந்த மானசீக வன்முறையையும் அகராதிகள் வன்முறையாக வரைவிலக்கணப்படுத்துவதில்லை அல்லவா?! அதனால்தான் அதனை ‘சாத்வீக சர்வாதிகாரம்’ என்கிறேன். இங்கே சாத்வீகம் என்பது physical force ஐப் பயன்படுத்தாமலிருப்பதை மாத்திரமே குறிக்கும்.
அடக்குமுறை சர்வாதிகாரிகள் தம்மைச் சூழ ஈவிரக்கமற்ற கொலைஞர்களை வைத்துக் கொள்வார்கள். அவர்களைக் கொண்டு துப்பாக்கி முனையில் தமது சர்வாதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.
சாத்வீக சர்வாதிகாரிகளோ தம்மைச் சூழ முதுகெலும்பற்ற துதிபாடிக் கலைஞர்களையே வைத்துக் கொள்வார்கள். அந்தத் துதிபாடிகள் முதுகெலும்புள்ள எவரும் அவரை நெருங்க விடாமல் ஒரு மாபெரும் கோட்டையையே தமது துதிபாடல்களால் கட்டி வைத்திருப்பார்கள்.
அந்தக் கோட்டைக்குள் முதுகெலும்புள்ள யாரேனும் ஊடுருவ முயற்சித்தால் ஆன்மீக அச்சுறுத்தல்களும் (spiritual blackmail) மனவெழுச்சி அச்சுறுத்தல்களும் (emotional blackmail) அவர்களுக்கெதிரான அஸ்திரங்களாகப் பிரயோகிக்கப்படும்.
சாத்வீக சர்வாதிகாரிகள் தமக்கான சட்டபூர்வத்தன்மை (Legitimacy)யை சில ஆன்மீகக் குறியீடுகள் மூலமாகவும், உணர்ச்சி வசப்படச் செய்யும் (எவ்வித ஆதாரமுமற்ற) சில தகவல்கள் மூலமாகவும், கருத்துப் பாசிசத்தின் மூலமாகவும், தாம் இன்றியமையாதவர்கள் என்ற விம்பத்தைக் கட்டமைப்பதனூடாகவுமே நிறுவ முயற்சிப்பர். தமது ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதற்கு பிறரை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குத் தாழ்த்தி மட்டந்தட்டுவர்.
ஒரு வன்முறை சர்வாதிகாரி துப்பாக்கி முனையில் செய்யும் அத்தனையையும் ஒரு சாத்வீக சர்வாதிகாரி நா முனையில் செய்வார்.
துதிபாடுபவர்கள் இதனையெல்லாம் சிலாகித்துக் கொண்டாடுவார்கள். சூழ இருக்கும் முதுகெலும்பற்ற எதிரிகளோ, துதிபாடவும் முடியாமல், தமது நலன்கள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் எதிர்க்கவும் முடியாமல் உள்ளே பொருமிக் கொண்டும், வெளியே நடித்துக் கொண்டும், முதுகுக்குப் பின் பழித்துக் கொண்டும் இருப்பார்கள்.
சாத்வீக சர்வாதிகாரிகளின் உள்ளங் கவர்ந்த ஒருவராக நீங்கள் இருக்க வேண்டுமா?!
உங்களுக்கான அடிப்படைத் தகுதி உங்களுக்கு முதுகெலும்பு இல்லாமலிருப்பதுதான்.
வாழ்க சாத்வீக சர்வாதிகாரம்!
வளர்க முதுகெலும்பில்லாதோர் சங்கம்!