ஒரு விஷயத்தை எழுதும் போதோ அல்லது பேசும் போதோ ‘அதனை அடுத்தவர்கள் அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற எதிர்பார்ப்பையெல்லாம் நான் வைத்துக்கொள்வதே கிடையாது. அப்படி எதிர்பார்க்கத் தொடங்கினால் வாழ்க்கையில் ஏமாற்றமும் விரக்தியுமே எஞ்சும்.
நமது கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், நமது கருத்து பிழை என்ற பார்வை இருக்கலாம், இதனை விட சிறந்த கருத்து உண்டு என்ற எண்ணம் இருக்கலாம். இதுதான் உலகம் என்பதில் எனக்கு நிறையவே புரிதல் இருக்கிறது.
நாம் எல்லாவற்றையும் அறிந்தவர்களுமல்லர், எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் படைத்தவர்களுமல்லர். எனவே எப்போதும் நமது தேடலுக்கும், அறிவை விசாலிப்பதற்குமான வாசல் திறந்தே இருக்கும்.
மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்கள், மாற்று நிலைப்பாடுகளைப் பற்றி கலந்தாலோசிப்பவர்கள், நமது நிலைப்பாடொன்றில் உள்ள போதாமைகளை சுட்டிக்காட்டுபவர்கள் எப்போதும் எமது மரியாதைக்கும் கண்ணியத்துக்கும் உரியவர்கள். அவர்களுக்கு நமது பிரார்த்தனைகளில் கூட நிச்சயம் இடமுண்டு.
ஆனால் இங்கே பேச விரும்புவது அவர்களைப் பற்றியல்ல.
இன்னுமொரு சாரார் இருக்கின்றனர்.
எனக்கு மாம்பழம் பிடிக்கும் என எழுதினால் ‘ஏன் பப்பாசிக்கு என்ன குறை?’ என கேள்வி கேட்டு, என்னை பழங்களில் தீண்டாமையை ஊக்குவிக்கும் ஒரு சாதி வெறியனாக அடையாளப்படுத்தும் முற்போக்காளர்கள்;
ஊரின் மையத்தில் உள்ள சாக்கடை தொடர்பாக பேசினால், ‘மனித உள்ளங்களில் உள்ள சாக்கடை பற்றி உங்களால் பேச முடியாதே?!’ என வம்புக்கு வந்து நிற்பவர்கள்;
ஒத்தகருத்தைப் பற்றி ஒரு பதிவு போட்டால் எதிர்க்கருத்தை வைத்து பஞ்சாயத்து நடாத்துபவர்கள்;
நமது பார்வையில் முக்கியம் எனக் கருதுவதை கோடிட்டுக் காட்டினால், ‘அவர்களது பார்வையில் முக்கியமானதென அவர்கள் கருதுவதை நான் கோடிட்டுக் காட்டவில்லை’ எனச் சொல்லி வன்மத்தை அள்ளித் தெளிப்பவர்கள்;
பதிவோ கொழும்பில் மழை பெய்வதாகச் சொல்லும் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு ‘நம்மால் குடையெல்லாம் பிடிக்க முடியாது’ என ஏதோ வீராப்பாய்ப் பேசுவதாய் நினைத்துக் கதையளப்பவர்கள்;
‘அதெல்லாம் ஒன்றும் தெரியாது, ஆனால் நீ சொல்லியிருப்பதில் என்னால் உடன்பட முடியாது’ என்ற கொள்கையை காரணமேயில்லாமல் கடைப்பிடிப்பவர்கள்;
‘நீ எந்தத் தலைப்பில் பேசினாலும், நான் இந்தத் தலைப்பில் மாத்திரம்தான் பின்னூட்டமிடுவேன்’ என விடாப்பிடியாய் இருப்பவர்கள்;
‘நீ என்னை மனதில் வைத்துக் கொண்டுதான் இதனை எழுதியிருக்கிறாய்’ என்று சொல்லிக்கொண்டு, கொஞ்ச நாளைக்கொரு தடவை இன்பாக்ஸ் பஞ்சாயத்துக்கு வரும் அடையாளமற்ற போலிகள்;
பதிவையும், பதிவு சொல்லும் அடிப்படைக் கருத்தையும் அம்போவென விட்டு விட்டு, பதிவின் ஒரு சொல்லில், அல்லது ஓர் உதாரணத்தில் தொங்கிக் கொண்டு ஃபத்வா கொடுப்பவர்கள்;
அடேங்கப்பா!
எத்தனை வகையறாக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது?!
இந்த வகையறாக்களால் மனிதர்களுக்கு அறிவு வளர்வதுமில்லை, தமது தவறு என்னவென்று புரிவதுமில்லை, அவர்களது விமர்சன சிந்தை கூர்மையடைவதுமில்லை, அவர்களது மனதுக்கு நிம்மதி கிடைப்பதுமில்லை.
எனவே இந்த வகையறாக்களை அலட்சியம் செய்வதை விட பாதுகாப்பானது வேறெதுவுமில்லை.
சமூக வலைதளங்களின் தெருவோரமெங்கும் இத்தகையவர்களை சந்திக்கலாம். பராக்குப் பார்க்காமல் பாதையில் கவனமாகச் செல்வதே ஆரோக்கியமானது.
No comments:
Post a Comment