audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Saturday, July 8, 2023

அந்த நாள் இனிதாகும்

 பனிரெண்டாம் நூற்றாண்டில் ஈரானில் வாழ்ந்த 'மௌலானா இம்தியாஸ் கரீமி' என்கிற சூஃபி கீழ்க்கண்ட விஷயத்தை அதிகாலை எழுந்ததும் உங்களுக்குள் மூன்று தடவை கூறிக்கொள்ளுங்கள்..அந்த நாள் இனிதாகும் என்கிறார்..


*நான் ரசிப்பதை எல்லோரும் ரசிக்க மாட்டார்கள்

நான் நம்புவதை எல்லோரும் நம்ப மாட்டார்கள்

நான் வெறுப்பதை எல்லோரும் வெறுக்க மாட்டார்கள்


*என்னுடைய ஆச்சர்யங்கள், புனிதங்கள், தீர்வுகள் எல்லாமே யார் வழியாகவோ எனக்குள் வந்தவை அல்லது நானே சுயமாக அடைந்தவை; அவற்றை இந்த உலகம் ஆமோதித்தாக வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை..


*என் அனுபவங்கள் எனக்குக் கடல் போன்றவை; ஆனால் இந்த பிரபஞ்சத்தில் நானே சிறு துளிதான்; எனக்கு மட்டும் கடலாக இருக்கும் சிறு துளி; இதுபோன்ற பல கடல்கள் ஒன்று சேர்ந்து வாழும் சிறு துளியே நம் பூமி..ஆகவே என் அனுபவங்களைப் பிறருக்கான வேதமாகவோ , பாடமாகவோ பரிந்துரைக்க மாட்டேன்..


*நான் சாப்பிடப் பிடிக்காத அல்லது சாப்பிட முடியாத பன்றியை வேறொருவன் உண்ணும் போது சலனமின்றி பசுவைப் புசிக்கிற மனோபாவத்தை எனக்குத் தந்தருள் அல்லாவே!!அதே பக்குவம் என் இந்திய நண்பனுக்கும் வாய்க்கப் பெற்று அவன் வங்காளத்து மீனை ஜல புஷ்பமாக உண்ணும் பேரருள் வாய்க்கப் பெறட்டும்..


*யார் மீதாவது நான் சுட்டுவிரல் நீட்டும் முன் மொத்த விரல்களையும் என்னை நோக்கி நீட்டிக் கொள்கிற மனத்தெளிவை இந்த விடிகாலை எனக்கு நல்கட்டும்..


*நான் ஆசியனாக இருந்தால் ஆப்பிரிக்கனை..இஸ்லாமியனாக இருந்தால் யூதனை..ஆணாக இருந்தால் பெண்ணை..கிறிஸ்தவனாக இருந்தால் அவிசுவாசியை...இந்திய பிராமணனாக இருந்தால் மலம் அள்ளுபவனை என் இடத்தில் வைத்துப் பார்க்கிற புத்தியை நான் வேதத்திலிருந்து பெறவில்லையெனில் எதற்கிந்தப் பாராயணம்??


*நான் நம்பும் உன்னை நிந்திப்பவன் வேறு எதையோ நம்புகிறான்..அது உன்னைப் போன்ற இன்னொரு கடவுளாகவோ அல்லது எதுவுமற்ற அவன் மனதின் தன்முனைப்பாகவோ கூட இருக்கலாம்..அவன் விரிக்கும் வலையில்  உன்னைப் பலி கொடுக்கும் முட்டாள்தனத்திற்கு என்னை ஆட்படுத்தி விடாமல் இருக்கச் செய்வாய் கருணையாளனே..'அளவற்ற அருளாளன்' என்று வர்ணித்த அதே வாயால் எவனுக்காகவோ உன் கையில் ஆயுதத்தைத் தூக்கித் தருவதோ, அல்லது நான் தூக்கியிருக்கும் ஆயுதத்தில் உன் பெயர் எழுதுவதோ உனக்கு உவப்பானதில்லையென்று விளங்கிக் கொண்டிருக்கிறேன் சத்தியனே!!!


₹இவற்றை எல்லாம் அரைதூக்கத்தின் தொடர்ச்சியாய் நிகழும் இந்தப் பிரார்த்தனை வழி புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் மூளையும், புரிந்து கொண்ட பின் எனக்குப் பிடித்தமான வழியில் எவர் குறித்தும் கவலையுறாமல் நடப்பதற்கு கொஞ்சம் ஈரமான இருதயமும், அந்தப் பாதையில் போகிற போது வந்து விழும் வசைகளையும், தாக்குதல்களையும் ஆன்மீக மனம் கொண்டு தாங்குவதற்கு எஃகு போன்ற உடலையும் தந்தருள்வாய் பெருந்தன்மையாளனே !!!!


தமிழாக்கம் : மானசீகன்


பின்குறிப்பு:மௌலானா இம்தியாஸ் கரீமி யார் என்று கூகுளில் தேட வேண்டாம்..அவர் என்னுடைய கடந்த பிறவி..பாவம் புகழடையாமலே இறந்து விட்டார்..நன்றி..


* மானசீகன் *

No comments:

Post a Comment