audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, April 22, 2021

திட்டமிட்டு செயல்படுவது

*சிந்தனைக் களம்*
➖➖➖➖➖➖➖
நமக்கு முன்னேற்றம் தேவை. அதற்கு ஒவ்வொரு நாளையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும். இருக்கும் நேரத்தை வீணாய் கழித்துவிட்டு `நேரம் போதவில்லை’ என்றும், `நான் நினைத்தது நடக்கவில்லை’ என்றும் சாக்குப்போக்கு சொல்லித் திரிந்தால் முன்னேற்றம் முடங்கித்தான் கிடக்கும்.

ஒவ்வொரு நாளும் எவ்வளவு முக்கியமானது, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றி நாம் பார்க்கலாம்.

நேரத்தை சரியாக பயன்படுத்துவதில் முதல் மந்திரமே திட்டமிட்டு செயல்படுவதுதான். இதில் திட்டமிடுவது வேறு, செயல்படுவது வேறு. எல்லோரும் திட்டமிடுகிறார்கள், செயல்படுகிறார்கள். ஆனால் திட்டமிட்டபடி செயல்படுவது கஷ்டம்.

இதைத் தவிர்த்து முழுமையாக செயல்பட விரும்பினால் முதலில் நாம் ஒரு செயலை ஒரே முறையில் செய்து முடிக்கப் பழக வேண்டும். அப்படியானால்தான் அடுத்தடுத்த செயல்களை திட்டமிட்டபடி செய்ய முடியும்.

அடுத்ததாக எந்த ஒரு செயலையும் திட்டமிட்டபடி நூல்பிடித்தாற்போல செய்ய முடியாது. அதற்கு காரணம், நாம் மட்டும் இங்கு தனித்து இல்லை. சமுகமாக வாழ்கிறோம். நமக்காக, குடும்பத்துக்காக, ஊருக்காக என்று கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறோம். அதனால் மற்றவர்களின் தலையீடு நிச்சயம் இடையே வருகிறது.

உதாரணமாக நீங்கள் ஒரு பணியை செய்யும்போது, பெற்றோர் ஒரு வேலையை செய்யச் சொல்லலாம். அதை உங்கள் பணிக்கு முன்பாக முடிக்க வேண்டிய அவசரம் என்று வற்புறுத்தலாம். இதனால் உங்கள் திட்டப்படி ஒரு செயலை செய்ய முடியாமல் போகலாம்.

இதுபோன்ற இடையூறைத் தவிர்க்க உங்கள் திட்டத்தை இரண்டாக வகுக்க வேண்டும். ஒன்று உங்கள் பணி (திட்டம்) சார்ந்தது. மற்றொன்று சூழல் (குடும்பம், சமுகம், உறவு, ஓய்வு) சார்ந்ததாக பிரிக்க வேண்டும். இதில் இத்தனை மணி நேரம் பணிக்கு, இதில் இருந்து இத்தனை மணி நேரம் மற்றவற்றிற்கு என்று பிரித்தாலும் சிக்கலைச் சந்திப்போம்.

நமது இலக்கை அடைய இவ்வளவு பணியைச் செய்ய வேண்டும். அதற்கு இவ்வளவு காலம் ஆகும் என்று வகுக்க வேண்டும். அதன் இடையே சூழல்சார்ந்த நேர ஒதுக்கீடும் இடம் பெறவேண்டும். ஆனால் அன்றைய நாளின் பயன்பாட்டை கணக்கிடும்போது நாம் திட்டப்படி இலக்கிற்கான பணிகளை சரியாகச் செய்து முடித்திருக்கிறோமா என்பதைக் கவனிக்க வேண்டும்.

இப்படி செயல்படும்போது முடிக்காத பணிகளைக் கண்டு திகைக்கக் கூடாது. நாம் அந்தப் பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல் போனதற்கு என்ன காரணம்? அதில் நாம் எந்த வகையில் சம்பந்தப்பட்டு இருக்கிறோம் என்று அடையாளம் காணுங்கள். அடுத்த நாள் அதை தவிர்க்க முயலுங்கள்.

உங்களின் திட்டம் குறித்து அனுபவ ரீதியாக சிலரிடம் கலந்து ஆலோசிக்கலாம். அவர்களிடம் கிடைக்கும் சாதகமான, பயனுள்ள ஆலோசனைகளை திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு பணியை அந்த நேரத்தில் செய்து முடிக்காமல் விட்டுவிட்டால் பணிகள் தேக்கம் அடைகிறது. இது ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும். சோம்பலையும் வளர்க்கும். அது ஒரு குப்பைக்கூளம் போன்றது எனலாம். இந்தப் பணி அசுத்தம் மற்ற பணிகளையும் பாதிக்கும். அதனால்தான் ஒரே முறையிலும், தேக்கமில்லாமலும் செய்ய முடித்தாலே வெற்றியை நெருங்கிவிடலாம் என வலியுறுத்தப்படுகிறது.

அதேபோல் இலக்கிற்கு இடைப்பட்ட காலத்தில் சந்தோஷம் தரும் செய்திகள், துக்கம் தருபவை, கொண்டாட்டம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. சந்தோஷம் வந்தால் நான் எதிர்பார்த்ததுதான் என நினையுங்கள். துக்கம் வந்தாலும் எதிர்பாராத இந்த இழப்பை சரி செய்வேன், அதற்காக உழைப்பேன் என்று எண்ணுங்கள்.

இறுதியாக நாம் உணர வேண்டியது வெற்றியாளர் களின் நேரம் தவறாமையைத்தான். ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்புலமாக `நேரம் தவறாமை’ இருக்கும். இதைப் பின்பற்றுவது ஆரோக்கியமான வளர்ச்சியைத் தரும். நன்மதிப்பையும் பெற்றுத்தரும். இது ஒரு டானிக் மாதிரி நம்மை ஊக்குவிக்கும்.

அதை நாமும் கடைபிடிப்போம். கடைபிடித்தால் வெற்றி பெறுவோம்!

No comments:

Post a Comment