அரட்டை அறிவியல்..05
வண்ணம் கொண்ட வெண்ணிலவே...
சில வருடங்களுக்கு முன் முழு சந்திர கிரகணம் வரப்போகிறது என்று வகுப்பில் பேசிக்கொண்டு இருந்தோம்.
பாடத்தில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் பற்றி இருந்தன.
கிரகணம் என்பது நிழல். பூமியைச் சுற்றி வரும் நிலவே கிரகணத்திற்கு அடிப்படையானது. இவ்வாறு சுற்றி வரும்போது சூரியன், பூமி, நிலா என்ற மூன்று வான் பொருட்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் உண்டாகிறது. சூரியன் மற்றும் நிலவுக்கு இடையே பூமி வரும்போது சூரிய ஒளியை பூமி மறைப்பதால் பூமியின் நிழல் நிலவில் விழுகிறது. இதையே சந்திர கிரகணம் (SEM) என்கிறோம். இது முழு நிலவன்று இரவில் நிகழும்.
அதேபோல் சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலா வரும்போது நிலவின் நிழல் பூமியில் விழுகிறது. இதையே சூரிய கிரகணம்(SME) என்கிறோம். இது பகலில் அமாவாசையன்று நிகழும்.
ரத்த நிலா...
சரி இப்போது சிவப்பு நிலா (Red moon) அல்லது ரத்த நிலா (Blood moon) பற்றி பார்ப்போம்.
முழு சந்திர கிரகணத்தன்று இரவில் சூரியனுக்கும் நிலவுக்கும் இடையே பூமி மெல்ல மெல்ல வரும். பூமியானது முழுவதும் நிலவை மறைக்கும் போது நிலவு என்ன ஆகும்? இருளாகி நிலவு தெரியாமல் போய் விடுமா? அதுதான் இல்லை முழுமையான சந்திர கிரகணம் நிகழும்போது நிலா சிவப்பு நிறமாகத் தெரியும். இதையே நாம் ரத்த நிலா அல்லது சிவப்பு நிலா என அழைக்கிறோம்.
சரி ஏன் இவ்வாறு நிகழ்கிறது?
காலையிலும் மாலையிலும் சூரியன் இருக்கும் திசையில் ஏன் வானம் சிவப்பாகத் தெரிகிறது? என்ற கேள்வியின் பதிலே மேற்கண்ட வினாவுக்கும் பதில் ஆகும்.
அதாவது பகலில் நீலநிறமாகத் தெரியும் வானம் காலை மாலையில் சிவப்பு நிறமாகத் தெரிவதற்குக் காரணம் ஒளிச்சிதறல் காரணமாகும். சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் உள்ளன. இவை 400 நானோமீட்டர் (வயலட்) முதல் 700 நானோமீட்டர் ( சிவப்பு) வரை Violet, Indigo, Blue, Green, Yellow, Orange,Red என வெவ்வேறு அலைநீளங்களில் பரவிக் காணப்படுகின்றன. இதில் அலைநீளம் குறைந்த ஊதா(Violet) பூமியின் வளிமண்டலத்தால் மிக அதிக சிதறலுக்கு (ராலே ஒளிச்சிதறல்) உட்படுகிறது. அலைநீளம் அதிகமான சிவப்பு மிகக்குறைந்த சிதறலுக்கு உட்படகிறது.
காலை மாலையில் சூரிய ஒளி மதிய நேரத்தைவிட அதிக தூரம் பயணம் செய்து பூமியை வந்தடைகிறது. எனவே அலைநீளம் குறைந்த ஊதா முதல் மற்ற நிறங்கள் சிதறலடைய அலைநீளம் அதிகமான மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு நிறங்கள் நம்மை வந்தடைகின்றன. இதனாலேயே மாலை நேரங்களில் வானம் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறங்களில் இருக்கின்றன.
சிவப்பு நிறத்தின் இந்த தொலைதூரம் பயணிக்கும் பண்பினாலேயே ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு நிறம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் தொலைதூரத்தில் இருந்து பார்க்கும்போதும், அதிக பனி விழும் காலங்களிலும் சிவப்பு நன்கு தெரியும்.
இப்போது முழு சந்திர கிரணத்தின்போது நிலா ஏன் சிவப்பாக மாறுகிறது எனப் பார்ப்போம்...
சூரியன் பூமி நிலா... இம்மூன்றும் நேர்க்கோட்டில் இருக்கும்போது பூமியானது முழுவதும் நிலவை மறைக்கும். இப்போது பூமியைச்சுற்றியுள்ள வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளியானது செல்லும் போது சற்று ஒளி விலகல் அடைந்து வளைந்து சூரிய ஒளி நிலவை அடைகிறது. பூமியின் வளிமண்டலமானது அலைநீளம் குறைந்த மற்ற நிறங்களைக் அதிகம் சிதறலடைய (ராலே ஒளிச்சிதறல்) வைக்கிறது. நாம் முன்பே கண்டது போல அலைநீளம் அதிகமான சிவப்பு ஒளி அதிக தூரம் பயணம் செய்து நிலவின் மேற்பரப்பை அடைகிறது. இதனாலேயே முழுசந்திர கிரகணத்தன்று மிக மெல்லிய சிவப்பு நிறம் நிலவில் தெரிகிறது. இதையே நாம் சிவப்பு நிலா அல்லது ரத்த நிலா என்கிறோம்.
நீல நிலா(Blue moon)....
சிவப்பு நிலாவை நாம் நேரடியாக முழு சந்திர கிரகணத்தன்று காணலாம். ஆனால் நீல நிலா என்பது கற்பனை. இது ஒரு கருத்தியல் அவ்வளவே.
நீல நிலா என்பதற்கு இரண்டு வரையறை உண்டு...
1. பொதுவாக ஒரு மாதத்திற்கு ஒரு முழு நிலா (பௌர்ணமி) வரும். எப்போதாவது ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி வரும்போது அம்மாதத்தில் இரண்டாவது வரும் முழு நிலவை நாம் நீல நிலா என்கிறோம்.
2. இரண்டாவது வரையறை ஒருவருடத்திய season ஐ அடிப்படையாகக் கொண்டது.
பொதுவாக ஒரு ஆண்டின் பன்னிரண்டு மாதங்கள் மூன்று மூன்று மாதங்களாக நான்கு பருவகாலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பருவத்திற்கு (Autumn,Spring, Summer, Winter) மூன்று மாதங்கள். பொதுவாக ஒருபருவத்தின் மாதத்திற்கு ஒன்று என மூன்று முழு நிலவு வர வேண்டும். எப்போதாவது ஒரு பருவத்தில் மூன்று நிலவுக்குப் பதிலாக நான்கு முழு நிலா நாட்கள் வரும்போது அந்த ஒரு பருவத்திய நான்கு முழுநிலவுகளில் மூன்றாவதாக வரும் நிலவையே நீல நிலா (Blue moon) என வரையறுக்கிறார்கள்.
வெள்ளி நிலவே....வெள்ளி நிலவே...
மஞ்சள் பூசும் வானம் எட்டிப் பார்த்தேன்...
வண்ணம் கொண்ட வெண்ணிலவே...
என நிலவின் நிறங்களை நிறைய பாடல்களில் வர்ணித்து இருக்கிறார்கள்.
அந்த வண்ணம் கொண்ட வெண்ணிலவைப் பற்றிய விவாதமாக அன்றைய வகுப்பறை நிறைந்தது.
நன்றி!
இவண்...
இராமமூர்த்தி நாகராஜன்
No comments:
Post a Comment