audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, April 22, 2021

💜🧡💜🧡💜🧡💜🧡💜🧡💜🧡

*💗உடல் நலம்...*

*கண் தானம் குறித்து பரவலாக பேசப்படும் கட்டுக்கதைகளும், உண்மைகளும்..!!*

இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் மக்கள் பார்வையற்றவர்களாகவும், 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வை குறைபாடு உள்ளவர்களாகவும் இருக்கதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் கார்னியல் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருவதால், கண் தானம் செய்வதற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அப்போது தான் இந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும். கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஊக்குவிப்பதும் அதனை பரப்புவதும் சமூகத்தின் பொறுப்பாகவே கருதப்படுகிறது.

ஏனென்றால், கண்தானம் குறித்த பரவலான கட்டுக்கதைகள் சமூகத்தில் பரவி வருவதால், அதனை குறித்த உண்மையை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகிறது. கண் தான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மருத்துவர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் மருத்துவமனைகளின் கடமையாகிறது. ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு பார்வையை வழங்கிடக் கூடிய இத்தகைய அற்புதமான நன்கொடைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மருத்துவ சமூகங்கள் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றன.

*கண் மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?* 

கண்ணின் முன்புறமானது, கார்னியா எனப்படும் வெளிப்படையான திசுக்களால் மூடப்பட்டிருக்கும். காயம், நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக கூட கார்னியா ஒரு மேகமூட்டமான வடிவத்தை உருவாக்கக்கூடும். அதனால், ஒரு நபருக்கு பார்வை பலவீனமடையவோ அல்லது சில நேரங்களில் பார்வை இழப்போ நேரலாம். சேதமடைந்த கார்னியாவை ஆரோக்கியமான மனித கார்னியா கொண்டு மாற்றுவதன் மூலம் கார்னியல் குருட்டுத்தன்மையின் நிலையை சரிசெய்திட முடியும். இத்தகைய கார்னியா மாற்று சிகிச்சையானது, கண் தானம் மூலம் மட்டுமே பெற முடியும். 

பார்வையற்ற ஒருவருக்கு பார்வையையே பரிசாக வழங்குவது எவ்வளவு உன்னதமான செயல் என்று யோசித்து பாருங்கள். அனைத்திலும் சிறந்தது கண் தானம் என்று வெறும் வசனமாக மட்டுமே பெரும்பாலும் பேசப்படுகிறது. இத்தகைய தானத்தை செய்ய முன்வர பலருக்கும் பலவிதமான தயக்கங்கள் இருக்க தான் செய்கிறது. இவை அனைத்திற்கும் காரணமாக இருப்பது, கண் தானம் குறித்து பரவி வரும் கட்டுக்கதைகள் தான். கண் தானம் குறித்து அகற்றப்பட வேண்டிய சில கட்டுக்கதைகள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுக்கதைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையைப் புரிந்துகொள்வதன் மூலம், கண்களை தானம் செய்ய முன்வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிடும்.

*கட்டுக்கதை 1:* கண் தானம் செய்தால், முகமே சிதைந்தது போல் முற்றிலும் மாறிவிடும். 

*உண்மை:* கண் தானம் செய்வதால் முகத்தில் எவ்வித சிதைவும் ஏற்படாது. இந்த நடைமுறையின் போது, கார்னியாக்கள் அகற்றப்பட்டு ஷெல்கள் பொருத்தப்படுகின்றன. எனவே, கண்கள் மூடப்படும்போது, அவை எப்போதும் போல சாதாரணமாக தான் தெரியும்.

*கட்டுக்கதை 2:* கண்கள் தானம் செய்தால், அடுத்த பிறவியில் அந்த நபர் பார்வையற்றவராக பிறப்பார்கள். 

*உண்மை:* அடுத்த பிறப்பு பற்றி யாருக்கும் உறுதியாக எதுவும் தெரியாது. ஒருவேளை அப்படி அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால், அதில் புதிய உடலுடன் தான் பிறக்கப் போகிறீர்கள். எனவே, முந்தைய பிறவியின் கண்கள் தேவையே இல்லை. இது முற்றிலும் கட்டுக்கதை மட்டுமே என்பதை முதலில் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். மேலும், கண் தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைவதற்கு மிகப்பெரிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

*கட்டுக்கதை 3:* உயிருடன் இருக்கும் போதும் கண் தானம் செய்ய முடியும். 

*உண்மை:* சிறுநீரகங்கள் அல்லது கல்லீரலின் ஒரு பகுதி ஆகியவற்றை மட்டுமே, ஒருவரால் நேரடியாக இன்னொருவருக்கு தானம் வழங்க முடியும். ஆனால், கண் தானம் என்பது ஒருவரின் மரணத்திற்குப் பிறகுதான் செய்ய முடியும். உயிருடன் இருக்கும் போது ஒருவர் தனது கண்களை தானம் செய்வதாக உறுதியளிக்கலாமே தவிர, உயிருடன் இருக்கும் போதே கண்களை வழங்கிட முடியாது. மேலும், இந்த காரணத்திற்காக உங்கள் நண்பர்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினரை கண் தானம் வழங்கிட ஊக்குவியுங்கள்..

*கட்டுக்கதை 4:* பார்வையற்ற நபர்கள் அனைவருக்குமே கண் தானம் மூலம் பார்வையை பெற செய்திடலாம். 

*உண்மை:* கார்னியஸின் ஒளிபுகா தன்மை கொண்ட நபர்கள் (கண்ணின் முன் வெளிப்படையான பகுதி) மட்டுமே பயனடைய முடியும். இதற்கு மாறாக, ரெட்டினா அல்லது ஆப்டிக் நரம்பு தொடர்பான பார்வை திறன் இழந்தவர்களுக்கு மற்றவர்களது கண் தானத்தால் எவ்வித பயனும் கிடையாது.

*கட்டுக்கதை 5:* விழித்திரை பிரச்சனையால் அவதிப்பட்டவர்கள் அல்லது கண்ணில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் யாரும் கண் தானம் செய்ய முடியாது. 

*உண்மை:* இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே கண் தானம் செய்யலாம்.எந்த இரத்த வகையை சேர்ந்தவரும், அறுவை சிகிச்சைக்கு உட்பட்டிருந்தாலும் அல்லது விழித்திரை அல்லது பார்வை நரம்பு பிரச்சனைகள் இருந்தாலும் கூட அவர்கள் தாராளமாக தங்களது கண்களை தானம் செய்யலாம். இவர்கள் தான் கண் தானம் செய்ய முடியம் என்ற எந்தவொரு வரையரையும் இல்லை.

*கட்டுக்கதை 6:* கண் தானமானது, ஒருவரது மரணத்திற்குப் பிறகு செய்யக் கூடியது. மரணத்தின் காரணம் எதுவானாலும் சரி அவர்களால் கண் தானம் செய்ய முடியும். 

*உண்மை:* கண் தானம் செய்த ஒருவர் இறந்து 6 மணி நேரத்திற்குள் கண் தானம் பெறுவோருக்கு பொருத்தப்பட வேண்டும். கண் தானம் செய்தோரின் உடல் குளிர்ச்சியான சூழலில், மின்விசிறிகள் போடப்படாமல், கண்கள் மூடப்பட்டு, கண்களில் மேல் ஈரமான பஞ்சு வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், தலை பகுதிக்கு கீழே 2 தலையணைகள் வைக்கப்பட வேண்டும். உள்ளூர் கண் சேகரிப்பு மையம் (மருத்துவமனை) அல்லது கண் வங்கியை தொடர்பு கொள்ள சிறிது நேரம் தேவை. மேலும், மரணத்திற்கான காரணம் செப்டிசீமியா, எச்.ஐ.வி, ரேபிஸ் போன்றவை என்றால், கண்கள் பார்வையற்ற பெறுநருக்கு நன்கொடை அளிப்பதை விட, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படும்.

*கட்டுக்கதை 7:* கண்களை தானம் செய்தால், அவர்கள் கண் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் ஒருவருக்கு விற்று பணமாக்கி விடுவார்கள். 

*உண்மை:* எந்தவொரு மனித உறுப்புகளையும் விற்பது சரி, வாங்குவது சரி சட்டவிரோதமான செயல். மேலும், அத்தகைய செயல் சட்டப்படி தண்டனைக்குரிய பெருங்குற்றமாகும். இது ஒரு உன்னதமான செயலுக்காகவும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளாலும் முறையாக கட்டுப்படுத்தப்படுகிறது.

*பகிர்வு*

💜🧡💜🧡💜🧡💜🧡💜🧡💜🧡

No comments:

Post a Comment