audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Wednesday, April 7, 2021

நம்முடைய நிஜ எதிரி யார்..??

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

*💗படித்ததில் பிடித்தது...*

**

எமோஷனல் இண்டெலிஜன்ஸ் (உணர்வுசார் நுண்ணறிவு) குறித்து புத்தகங்கள் இன்றைக்கு அவசியமானவை. சுயமுன்னேற்ற புத்தகங்கள் எழுதிவரும் சோம.வள்ளியப்பன் ஆங்கிலத்தில் 'YOU Vs YOU' என்ற புத்தகத்தைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.இந்நூல் எமோஷனல் இண்டெலிஜன்ஸை அலசி ஆராய்கிறது. அதிலிருந்து ஒரு பகுதி.

தங்களுடைய உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சிலரும்கூட, மற்றவர்களால் தூண்டப்படும்போது சில நேரம் தவறான விஷயங்களைச் செய்துவிடுகிறார்கள். மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் உள்ள மனிதர்களைக் கையாளுவது அவ்வளவு எளிதானதல்ல. சிலர் படபடவென்று பொரிந்து தள்ளிவிடுவார்கள்.

ஆனால், இன்றைய வேலைச் சூழலில் மற்றவர்களுடனான நமது அணுகுமுறை மிகவும் முக்கியமானது. சூழ்நிலையும், தருணமும் இணக்கமற்று, எதிர்நிலையில் இருக்கும்போதுகூட, சிலர் விஷயங்களைச் சிறப்பாகக் கையாண்டு தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்வார்கள். தங்களுடைய, மற்றவர்களுடைய உணர்ச்சிப் பிரச்சினைகளைச் சிலர் எவ்வளவு சிறப்பாகக் கையாண்டார்கள் என்பதைச் சுவாரசியமான உண்மைச் சம்பவம் மூலம் பார்க்கலாம்.

*அனுமதியில்லை..*

இந்தச் சம்பவம் நடைபெற்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருச்சி அருகேயுள்ள டால்மியா சிமெண்ட்ஸின் முதலாளி ஜெய்தயாள் டால்மியா, சென்னையிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். திருச்சி ஜங்ஷன் சென்று, அங்கிருந்து தனது தொழிற்சாலைக்கு வருவதுதான் அவர் வழக்கம். ஏதோ சில காரணங்களால், அவரது தொழிற்சாலை இருந்த ஸ்டேஷன் அருகே ரயில் சில நிமிடங்கள் நிற்க நேரிட்டது.

அங்கிருந்து திருச்சி ஜங்ஷன் சென்று, தொழிற்சாலைக்குத் திரும்ப 2 மணி நேரம் ஆகும். அன்றைக்கு அவரிடம் பெரிய லக்கேஜும் இல்லை. இதையெல்லாம் யோசித்து, அங்கேயே அவர் இறங்கிவிட்டார். ரயில் தடம் வழியாகவே சென்று, 10 நிமிடங்களில் தொழிற்சாலையின் பின் கதவை அவர் அடைந்துவிட்டார். அந்தக் கதவு வழியாகத்தான் சிமெண்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களான சுண்ணாம்புக் கற்கள், சரக்கு ரயில்கள் மூலமாக எடுத்துச் செல்லப்படும்.

அதிகாலை நேரம் என்பதால், அந்தப் பகுதி சுறுசுறுப்பாக இல்லை. கதவு மூடப்பட்டிருந்தது. அங்கிருந்த வாட்ச்மேனை அழைத்த டால்மியா, கதவைத் திறக்கச் சொன்னார்.

“எதற்காகத் திறக்க வேண்டும்? இந்தக் கதவு சரக்கு ரயில் போவதற்குத்தான். உரிய உத்தரவு இல்லாமல், யாரையும் இந்தக் கதவு வழியாக அனுப்ப முடியாது, சார்” என்று அந்த வாட்ச்மேன் சொன்னார்.

“நான்தான் இந்தக் கம்பெனியின் முதலாளி” என்றார் டால்மியா.

“அப்படியானால் உங்கள் ஐ.டி. கார்டைக் காட்டுங்கள்” என்றார் அந்த வாட்ச்மேன். டால்மியாவிடம் அப்படி எதுவும் இல்லாததால், நீங்கள் மெயின் கேட் போய்விடுங்கள் சார் என்று அந்த வாட்ச்மேன் சொல்லிவிட்டார்.

இதையடுத்து டால்மியா, 2 கி.மீ. தொலைவு நடந்து மெயின் கேட் வந்தார். சூரியன் உதயமாகி இருந்ததால், மெயின் கேட் போனவுடன் அங்கிருந்தவர்கள் அவரை நன்றாக அடையாளம் கண்டுகொண்டு சல்யூட் அடித்து, அவரிடம் இருந்து பெட்டியை வாங்கிக்கொண்டார்கள்.

காலை 10 மணிக்கு, எல்லாத் துறைத் தலைவர்களையும், அவரை உள்ளே அனுமதிக்காத வாட்ச்மேனையும் டால்மியா அழைத்தார். அனைத்துத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் அந்த வாட்ச்மேனைப் பாராட்டி, பரிசுப் பணமும் கொடுத்தார். ஆனால், அந்த வாட்ச்மேனிடம் நான்தான் முதலாளி என்று வலியுறுத்திச் சொல்லிவிட்டு, அவர் உள்ளே போயிருக்கலாம். ஆனால் ஏன் அப்படிச் செய்யாமல், வாட்ச்மேன் சொன்னதை டால்மியா ஏன் கேட்டார்.

“கதவைத் திற” என்று வாட்ச்மேனிடம் டால்மியா உத்தரவு போட்டிருக்கலாம். ஆனால், அவர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அது மட்டுமில்லாமல், அந்த வாட்ச்மேனை அழைத்து எல்லாத் துறைத் தலைவர்கள் முன்னிலையிலும் அவர் பாராட்டினார்.

அது ஏன் என்றால், இது போன்ற மதிப்பீடுகளுக்கு (விதிமுறைகளை மதித்தல்) எவ்வளவு தூரம் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை வெறுமனே சொல்லாக இல்லாமல், செயலாகச் செயல்படுத்திக் காட்டியிருக்கிறார். இதுபோன்ற புத்திசாலித்தனமான செயல்பாடுகள், மிகப் பெரிய பலன்களைத் தரும்.

*பகிர்வு*

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋

No comments:

Post a Comment