audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Wednesday, April 7, 2021

சிலருக்கு காலையில் எழுந்ததும் கண் வீங்கி இருக்கும்.. இது ஏன்னு தெரிஞ்சா அசால்ட்டா விட மாட்டீங்க...

🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎

*💗உடல் நலம்...*

**

காலையில் எழுந்ததும் முதல் காரியமாக கண்ணாடியில் தான் நம் முகத்தை பார்ப்போம். அப்பொழுது சிலருக்கு கண்களைச் சுற்றி வீக்கம் இருக்கும். இந்த கண் வீக்கத்தை கண் இமை எடிமா என்று அழைக்கின்றனர். ஆனால் இதனால் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அசால்ட்டாக விட்டு விடுவோம். கொஞ்ச நேரம் கழித்து இது அதுவாகவே சரியாகி விடுவதும் உண்டு.

ஆனால் சில நேரங்களில் இது கடுமையான பார்வை பிரச்சனையை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த வீக்கம் செல்லுலிடிஸ், கிரேவ்ஸ் நோய் மற்றும் ஓக்குலர் ஹெர்பீஸ் போன்ற கடுமையான நோயின் தாக்கமாக இருக்கலாம் என்றும் கண் மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே காலையில் எழுந்ததும் ஏற்படும் கண் வீக்கம் மற்றும் சும்மா சும்மா கண்கள் வீங்குவதை புறக்கணிக்க வேண்டாம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இந்த வீக்கம் கண்களில் ஏற்படும் தொற்றால் கூட நேரலாம். எனவே மக்கள் உடனே ஒரு கண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

கண் இமைகளில் ஏற்படும் நோய்த் தொற்றால் இமைகள் தடித்து கண்கள் வீங்கிப் போகின்றன. இதற்கு கண்களில் ஏற்படும் அழற்சி, தொற்று அல்லது காயங்கள் காரணமாக இருக்கலாம். இப்படி கண்கள் வீங்குவதற்கான காரணங்களையும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.

*காரணங்கள்:* 

* தூங்கி எழுந்ததும் கண்களில் ஏற்படும் வீக்கம் வழக்கமாக 24 மணி நேரத்திற்குள் போய் விடும். இந்த வீக்கம் கண் இமைகளில் அதிகப்படியான நீர் தேங்குவதால் (எடிமா) ஏற்படுகிறது. 

* காண்டாக்ட் லென்ஸ் போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமை, கண் மை போன்ற கண்களுடன் தொடர்புடைய அழகு சாதனப் பொருட்களாலும் இந்த ஒவ்வாமை ஏற்படலாம். 

* கண்களைச் சுற்றி காயம் உண்டாதல் 

* கண்களில் எதாவது பூச்சு கடியால் வீங்கிப் போதல் 

* கண் வீக்கம், இமைகள் சிவந்து காணப்படுதல் : கண் இமையில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் தொற்றால் ஏற்படுகிறது. 

* இமைப்படல அழற்சி என்ற பிங்க் கண் தொற்று நோய் 

* கண் இமைகளில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் ஏற்படும் செயலிழப்பு 

* கண்களின் சுற்றுப்பாதையில் ஏற்படும் செல்லுலிடிஸ் 

* கொழுப்பு வீழ்ச்சியால் வீங்கிப் போதல் 

* ஆழமான அழுகை மற்றும் நீடித்த அழுகையால் கண் வீக்கம் உண்டாதல். 

இதைத் தவிர சில மருத்துவ நோய்கள் கூட கண்களைச் சுற்றி வீக்கத்தை உண்டாக்கும். உதாரணமாக கிரேவ் நோய் இது தைராய்டு சுரப்பிகளைப் பாதிக்கிறது. இதனாலும் கண்களைச் சுற்றி வீக்கம் உண்டாகிறது.

*கண் வீக்கத்தின் அறிகுறிகள்:* 

* காலையில் எழும் போது கண்கள் வீங்கிப் போய் இருத்தல் 

* கண்களில் எரிச்சல் மற்றும் அபாயகரமான உணர்வு 

* பார்வை மங்கலாகுதல் மற்றும் பலவீனமடைதல் 

* கண்களில் நமைச்சல் ஏற்படுதல் 

* சிவப்பு நிற கண்கள் மற்றும் வெண்படல அழற்சி 

* பிரகாச ஒளியை பார்க்கும் போது கண்கள் கூசுதல் 

* கண்கள் வறண்டு போதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.


*மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?*

கண்களின் வீக்கம் தொடர்ந்து இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது. கண் இமைகளில் வலி, பார்வை மங்கலாகுவது அல்லது பலவீனமடைதல், நமைச்சல் அல்லது அரிப்பு உணர்வு, சிவப்பு நிற கண்கள் மற்றும் வீக்கம், மற்றும் கண்களில் மணல் இருப்பது போன்ற உறுத்தல் இருந்தால் உடனே கண் மருத்துவரை அணுகுங்கள். 

கண்களுக்கு சூடான ஒத்தடங்கள் மற்றும் சரியான தூக்கம் கொடுத்த பிறகும் கண் வீக்கம் தொடர்ந்தால் கண் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரை அணுகுங்கள். உங்க கண்களில் ஏற்படும் அறிகுறிகளை பொறுத்து 4-6 வாரங்களுக்கு ஆன்டிபயாடிக் கண் சொட்டு மருந்து , களிம்பு அல்லது கிரீம் ஆகியவற்றை மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்தலாம். சில சமயங்களில் வீங்கிய கண்கள் கண் புற்றுநோயின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். எனவே இது போன்ற இக்கட்டான சூழ்நிலையை முன்னரே கண்டறிந்து விட்டால் நல்லது. கண் புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலயே சரி செய்து விடலாம்.

*வீங்கிய கண்களுக்கான வீட்டு வைத்தியங்கள்:* 

உங்களுக்கு தூக்கமின்மை மற்றும் கண்களைச் சுற்றி திரவம் தேங்குதல் போன்ற பிரச்சினைகளால் கண்கள் வீங்கி இருந்தால் கீழ்க்கண்ட வீட்டு வைத்திய முறைகள் பலன் அளிக்கும். 

* உங்க கண்களை உப்பு நீரைக் கொண்டு கழுவுங்கள் 

* குளிர்ச்சியான துணியால் அல்லது ஐஸ் கட்டிகள் கொண்டு லேசாக ஒத்தடம் கொடுங்கள். 

* கண்கள் வீங்கி இருந்தால் காண்டாக்ட் லென்ஸ்களை பயன்படுத்துவதை தவிருங்கள். 

* கண் தொற்று இருந்தால் மருத்துவர் பரிந்துரைத்த கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்துங்கள். 

* கண்களைச் சுற்றி தேங்கி இருக்கும் திரவம் வெளியேற தலையணையை உயர்த்தி வைத்து உறங்குங்கள்.

*தடுப்பு நடவடிக்கைகள்:* 

* வீங்கிய கண்கள் சில சமயங்களில் அழற்சியினால் கூட ஏற்படலாம். எனவே உங்களுக்கு ஒவ்வாமை அளிக்கும் பொருட்களை பயன்படுத்துவதை தவிருங்கள். 

* பொதுவாக கண்களுக்கு பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள் நறுமணம் இல்லாத, அதே நேரத்தில் அழற்சி ஏற்படுத்தாத பொருட்களாக பார்த்து தேர்ந்தெடுங்கள். 

* காண்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் கண் தொற்று மற்றும் எரிச்சலை போக்க சரியான சுகாதார பராமரிப்பு முறைகளை பின்பற்றுங்கள். 

மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகள் உங்களுக்கு கண் வீக்கம் வராமல் தடுக்க உதவும். கண் வீக்கம் தொடர்ச்சியாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.

*பகிர்வு*

🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎🧡🤎

No comments:

Post a Comment