audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, April 27, 2023

 ஒரு பெண்மணி, சார் என் குழந்தைக்கு ஷு லேஸ் கூட கட்டத் தெரியாது சார்!! 

தலை சீவ மாட்டான், 

நான் தான் இன்றும் உணவு கூட ஊட்டி விடுகிறேன்..


வயசென்னமா ஆச்சு ?? 


*10 வயசு சார்* 


சரி!! 😲 

என்ன படிக்கறார்மா? 


6 ம் வகுப்பு சார்


சூப்பர், 

எப்படிப் படிப்பார்? 


நல்லாப் படிக்கறான் சார், 

ஆனா..

கிரேடுதான் நெனச்ச மாதிரி வரல 

கணக்குல ரொம்ப வீக், 

ஸ்போர்ட்ஸ்ல  இன்ட்ரஸ்ட் இல்ல, 

செஸ் வரமாட்டேங்குது,

கராத்தே போக மாட்டேங்கறான், 

ஸ்விம்மிங் க்ளாஸ் போறான்..ஆனா சளி பிடிக்குது, வேண்டாம்னு விட்டுட்டோம்.!! 

வெஸ்டர்ன் மியூசிக் படிக்கறான்


ஓ.கே

ஓ.கே..! 

வீட்டு வேலைகளில் அக்கறை  இருக்காமா?? 


வீட்டு வேலனா என்ன சார்? 


அவன் உங்களுக்கும், உங்கள் அன்றாடத் தேவைக்கும் செய்யும் உதவிகள் மா..! 


அட நீங்க வேற சார்.. 

தண்ணீர் குடிக்கக் கூட எந்திரிக்க மாட்டான் !! 😢 


இது நல்லதாம்மா? 


நல்லாப் படிச்சாப் போதும் சார் 


அப்படியானால், எதுக்கு கராத்தே, நீச்சல் எல்லாம் அனுப்பறீங்க?!


எல்லாம் தெரிஞ்சிருக்கணு ம்ல சார், 

நாளைக்கு அவன் தனி ஆளா இந்த உலகத்தைச்  சமாளிக்கணுமே!! 


ஓஹோ..! 

ரைட்டு.

வீட்டில் உள்ள விஷயங்களைச் சமாளிக்கத் தெரியாமல் எப்படிமா ஊரிலும், நாட்டிலும், வெளி நாட்டிலும் உள்ள விசயத்தினைச் சமாளிக்க முடியும்!! 


அதில்ல சார், 

ஒரே பையன்..


இது இன்னும் மோசம்..

அப்ப, நீங்க மேலும் எச்சரிக்கையாக இருக்கணுமே மா !! 


அவரிடம் விபரங்களைக் கூறி, அந்தச் சிறுவனிடமும், அவனது பழக்க வழக்கங்களில் இருந்த சாதக பாதகங்களை எடுத்துக் கூறி, 

அன்றாடம் அவன் செய்ய வேண்டிய விசயங்களை ஓர் அட்டவணை போட்டுக் கொடுத்து அனுப்பிவிட்டேன் !! 


தற்போது கதைச் சுருக்கம்..


ஹார்வார்ட் பல்கலைக்கழகம் நடத்திய மானுடர்களுக்கான மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்றான 

Harvard Grant Study எனும் ஆய்வில், 


குழந்தைகளை அன்றாட வீட்டுப் பணிகளில் இருந்து விலக்கி வைப்பது பெரும் அபத்தம் எனவும்,

இதனால் அவர்களது பலவகையான ஆற்றல்களின் ஆக்கங்கள் குறைபடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  


மேலும்..

படிப்பு, 

கற்றல், 

போட்டித் தேர்வு, 

தரவரிசை, 

மதிப்பெண், 

மதிப்பீடு, 

பல்வேறு கலை கற்றல் 

இவை அனைத்திற்கும் தேவைப்படும் 

ஆக்கமும்,

ஊக்கமும்,

மன தைரியமும்,

நம்பிக்கை தூண்டலும் ,

வெற்றி, தோல்விகளைப் பகுத்தறியும் பக்குவமும்,

உடனிருப்போருடன் உறவாடும் உளவியலும், 

நிச்சயமாக வீட்டில் நடத்திடும் நடத்தைகளே தீர்மானிக்கும் என்கிறது இந்த ஆய்வு..! 


மாறாக, 

சிறு வேலைகளைக் கூட செய்திட முடியாமல் இருக்க,  செய்ய அனுமதிக்காத பெற்றோர்களை இந்த ஆய்வு எச்சரிக்கிறது


சார்..

என்ன சார் இது குழந்தையை எல்லாம் வேலை வாங்கச் சொல்றீங்க


இல்லை,

நான் அவர்களை வேலை வாங்கச் சொல்லவில்லை..

மாறாக, 

வாழ்க்கையின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு அவற்றோடு சேர்ந்து நடக்கக் கற்று கொள்ளச் சொல்கிறேன் 


உங்கள் அன்றாட வேலைகளில் அவர்களைச் சேர்த்துக்கொள்ளத்தான் சொல்கிறேன் 


தினமும் பள்ளி செல்லும் குழந்தைகளானால், 

அவர்களது தண்ணீர் பாட்டிலை அவர்களே நிரப்பச் செய்யுங்கள், 

அவர்களின் உணவுத்  தட்டை  அவர்களே எடுத்து வந்து உணவை வாங்கி, தானாக உண்ணச் செய்யுங்கள்..

அவர்கள் 

தலை சீவுவது,

காலணி அணிவது, 

அதற்கான பாலிஷ் போடுவது, 

வார விடுமுறைகளில்,

வீட்டின் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்தல்,

செடிகளுக்கு நீர் பாய்ச்சுதல்,

கார் (அ) பைக் கழுவ உதவுதல், 

படுக்கை உறை மாற்றுதல், 

வாஷிங் மெசினில் அவர்கள் துணிகளை எடுத்துப் போடுதல்,

வெயிலில் காய்ந்த துணிகளை மடித்து வைத்தல், 

சமையலுக்குக் காய்கறி கழுவுதல், 

குளிர்சாதனப் பெட்டியைச் சுத்தம் செய்தல்,

சமையலறைப் பொருட்களை அடுக்குதல், 

என சின்னச் சின்ன வேலைகளை வாரக் கடமையாக்கிடுங்கள்


*அவர்களை அன்றாட வாழ்வியலிலிருந்து அன்னியப்படுத்திடாதீர்கள்*


இவ்வனைத்திற்கும் ஓர் அழகான சன்மானம் வாராவாரம்  வழங்கிடுங்கள்,  இது அவர்களை மேலும் ஊக்குவிக்கும்.

பணத்தின் அருமையையும், அதைச் சேமிப்பதையும் உணர வைக்கும். 


*அவர்கள் விரும்பும்படி ஏதேனும் ஓர் ஹாபி அமைத்துக் கொடுத்தல்* 


மீன் தொட்டி, 

பறவை, 

நாய்க்குட்டி, 

புறாக்கள், 

பூச்செடி  கொடிகள் 

ஆகியவற்றைப் பராமரிக்கச் செய்யுங்கள்..


முடிந்தவரை, 

வீட்டில் இருக்கும் நேரங்களில்..

தொலைக்காட்சி, 

கணினி விளையாட்டுக்கள்,

திரைப்படங்கள், 

உணவக உணவுகள் என அவர்களின் எண்ணங்களை, செயற்கையான விசயத்திலிருந்து வெளிக்கொணர்ந்து, இயல்பான நம் அன்றாட தினசரி வேலைகளில் ஈடுபடச் செய்யுங்கள்..


இன்று பல கல்லூரி மாணவர்கள், அதிலும் முக்கியமாக மருத்துவம் பயிலும் மாணாக்கர் கூட தற்கொலை வரை சுலபமாக முடிவெடுப்பதற்கு  மிக முக்கிய காரணம், 


தம்மையும், தம் சுற்றத்தையும்  பேணிட  அறியாததால் மட்டுமே!!

குழந்தைகள் ஒன்றும் வீட்டில் வளர்க்கும் ஆர்க்கிட் பூச்செடி அல்ல..பொத்திப் பொத்தி, உரம் போட்டு, நீர் ஊற்றி வளர்க்க..


சிறு வெப்ப நிலை மாறினாலும் அது வாடிப்போய் இறந்துவிடும் 


மாறாக, 

அவர்கள் காட்டு மரங்கள்போல் வளர்ந்திட வேண்டும்


*முறையான வழிகாட்டுதலும் ,அரவணைப்பும் , அக்கறையும் மட்டுமே இருத்தல் வேண்டும்* 


உங்கள் பெற்றோரிடம் அவர்களை ஒருங்கிணையுங்கள்.

வாழ்க்கையின் யதார்த்தங்களைக் கற்றுக் கொள்வார்கள். ஒழுக்கத்தையும் தைரியத்தையும் ஒருங்கே பெறுவார்கள். 


அதீத ஆர்வமும், 

தேவையற்ற கரிசனையும், 

எல்லை மீறிய அன்பும், பாராட்டுதலும் அவர்களுக்கு நிச்சயமாக நல்லது அல்ல.. சிறு சிறு விசயத்தை நளினமாகக் கையாண்டு, எளிமையாகச் செய்து முடிக்கும் பழக்க வழக்கம் ஆரோக்கியமான நல்வாழ்வுக்கு வழிவகுக்கும்.....

No comments:

Post a Comment