audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, July 8, 2021

4.புத்தம் சரணம் கச்சாமி!




4.புத்தம் சரணம் கச்சாமி!






Buddhs in Ladakh,Kashmir

ச.நாகராஜன்



புத்தம் சரணம் கச்சாமி

ஆரம்ப காலத்தில் புத்தர் ஒரு நிலையான இடத்திலும் தங்கவில்லை. நாடு முழுவதும் சுற்றியவாறே தன்னைச் சூழ்ந்து இருந்தோரிடம் அவர் உபதேசிக்கத் தொடங்கவே அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் அவருடன் அனைத்தையும் துறந்து சென்றனர். மரத்தடியில் படுக்கை, கிடைத்த இடத்தில் பிக்ஷை, இவற்றைக் கொண்டு அவர்கள் புத்தரின் போதனைகளை மனதில் கொண்டு அவற்றைப் பின்பற்றலாயினர்.



புத்தர் அனைவருமே புத்தராகலாம் என்றார். புத்தர் என்பது ஒரு நபரைக் குறிப்பதில்லை. புத்தத்வத்தைக் குறிப்பிடுகிறது. அந்த நிலையை அனைவரும் எய்தலாம் என்பதே புத்தரின் அருளுரை. புத்தரை ஆஸ்ரயமாக அண்டினோர் மூன்றை சரணடைந்து அவரை ஏற்றுக்கொண்டனர்.

புத்தம் சரணம் கச்சாமி!

புத்தரை சரணமாக அடைந்தனர்

தம்மம் சரணம் கச்சாமி

புத்தரின் போதனைகளான தர்ம நெறிகளைச் சரணமாக அடைந்தனர்.

சங்கம் சரணம் கச்சாமி

புத்தரின் கொள்கைகளைக் கடைப்பிடிப்போரின் சங்கத்தைச் சரணமாக அடைந்தனர்.



நாளாக நாளாக துறவிகளாக விரும்புவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்காகப் பெருகியது. அப்போது உண்மையாக புத்த நெறியில் நடக்க விரும்புபவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கக் கடுமையான சட்ட திட்டங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவே அவை இயற்றப்பட்டன.



புத்தரின் மகத்தான இன்னொரு பணி பெண்களைப் பற்றியது.அவர்களும் இறை நிலையை அடைய முடியும் என்ற அவரது உபதேசம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பிக்ஷுணிகள் ஆக பெண்களும் முன் வந்தனர். கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்றனர்.



Picture of Buddha at bamiyan wich was destroyed by the Afgan terrorists.

ஒரு புத்த மடாலயத்தில் சேர்வது சுலபம் இல்லை என்ற நிலை உருவாகி அது இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்றோம், மடத்தினுள் நுழைந்தோம், புத்த துறவியாகி விட்டோம் என்று எவராலும் ஒரு நாளும் சொல்லி விட முடியாது- இன்றளவும் கூட.



குருகுல வித்யா

வேத காலத்தில் குருகுலங்கள் இருந்தன. சிஷ்யர்களை குரு நன்கு பரிசோதிப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்கள் அவருக்கு சிக்ஷ்ருஷை எனப்படும் பணிவிடைகளைச் செய்வர். குருவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பர். வித்தையும் ஞானமும் அவர்களுக்குத் தானே வரும்!

மஹரிஷி ஆருணியின் வரலாறு

உதாரணத்திற்கு ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே பார்க்கலாம்.

அயோத தௌம்யர் என்று ஒரு மஹரிஷி இருந்தார். அவருக்கு உபமன்யு,ஆருணி,வேதர் என்ற மூன்று சிஷ்யர்கள் இருந்தனர். ஒரு நாள் அயோத தௌம்யர் தனது சிஷ்யரான ஆருணியை நோக்கி,”ஆருணி, நீ போய் கழனிக்கு வருகிற வாய்க்கால் உடைப்பை அடை” என்று கட்டளையிட்டார்.

ஆருணியும் தனது ஆசார்யரின் கட்டளையை சிரமேற்கொண்டு கழனியை நோக்கிச் சென்றார்.அங்கே அவரால் உடைப்பை சாதாரண வழிகளின் மூலம் அடைக்க முடியவில்லை. குருவின் கட்டளையைச் செய்து முடிக்க வேண்டுமென்ற ஆதங்கமும் ஆர்வமும் சிரத்தையும் அவரை உந்தவே என்ன செய்வது என்று யோசிக்கலானார். கடைசியில் அவருக்கு ஒரு உபாயம் தோன்றியது.



உடைப்பு இருந்த இடத்தில் தன் உடலை அடைத்து இப்படியே இருப்பேன் உடைப்பு அடைபட்டுப் போயிற்று என்று சொல்லி அப்படியே இருக்கலானார்.



இதனால் தண்ணீர் வெளியேறாமல் மடை அடைபட்டது.

நேரம் சென்றது. அயோத தௌம்யருக்கு ஆருணியின் நினைவு வரவே, ஆருணி எங்கே என்று தன் சிஷ்யர்களை நோக்கிக் கேட்டார். அவர்கள், “குருவே! நீங்கள் தான் அவரை கழனியில் வாய்க்கால் உடைப்பை நிறுத்தும்படி அனுப்பி இருக்கிறீர்கள்” என்று கூறினர்.



தௌம்யருக்கு ஆருணியை அனுப்பியது ஞாபகத்திற்கு வரவே, “வாருங்கள், ஆருணி இருக்கும் இடத்திற்குப் போவோம்” என்று சிஷ்யர்களை அழைத்துக் கொண்டு வாய்க்காலை நோக்கிச் சென்றார். அங்கே சென்றதும் தௌம்யர், ‘குழந்தாய்,ஆருணி! நீ எங்கே இருக்கிறாய்’? இங்கே வா!”என்று கூவினார்,



“இதோ இங்கே இருக்கிறேன்” என்று பதில் சொன்ன ஆருணி மடையிலிருந்து வெளியே வந்தார்.”இதோ இந்த வாய்க்கால் உடைப்பை அடைப்பதற்காக இங்கே இருந்தேன். வேறு எந்த உபாயமும் எனக்குத் தெரியாததால் இங்கேயே இதில் பிரவேசித்து உடைப்பை அடைத்தேன்” என்றார் ஆருணி.



நடந்ததைப் புரிந்து கொண்ட அயோத தௌம்யர் ஆருணியை நோக்கி, “ நீ இவ்வாறு எழுந்ததிலிருந்து மடை திறக்கப்பட்டபடியால் உனக்கு இனிமேல் பிளக்கிறவன் என்ற பொருள் உடைய உத்தாலகர் என்ற பெயர் உண்டாகக் கடவது! அந்தப் பெயர் குருவாகிய என்னுடைய அனுக்ரஹத்தைப் பறை சாற்றும் ஒரு அடையாளமாக இருக்கட்டும்” என்று மனமகிழ்ந்து கூறினார். மேலும்,” நீ என்னுடைய கட்டளையை சிரமேற்கொண்டு அதற்குக் கீழ்ப்படிந்து நடக்கிறபடியால் சர்வ மங்களத்தையும் அடைவாய். எல்லா வேதங்களும் அனைத்து சாஸ்திரங்களும் உன்னிடம் பிரகாசித்து விளங்கும்” என்று ஆசீர்வதித்தார்.



ஆருணி தவத்திலும் ஞானத்திலும் சிறந்த பெரும் மஹரிஷியானார்.



இது போன்ற குரு அனுக்ரஹத்தால் உயர்ந்த சிஷ்யர்களை வேத, இதிஹாஸ, புராணங்களில் காணலாம்.

இதே குரு – சிஷ்ய உறவு புத்தமதத்திலும் வேரூன்ற ஆரம்பித்தது.

இன்றளவும் தொடர்கிறது.

உதாரணத்திற்கு இன்று புத்தமதத்தில் தலை சிறந்து விளங்கும் ஒருவரது வரலாற்றைப் பார்ப்போம்.

இது அவராலேயே தீர்க்கமாக எழுதப்பட்ட ஒன்று. ஆர்வத்தைத் தூண்டி விழிகளை வியப்பால் விரிய வைக்கும் ஒன்று!




சின்ன உண்மை



பௌத்தர்கள் கோவிலுக்குத் தங்களால் முடிந்த எந்த நேரத்திலும் போகலாம். பௌர்ணமியில் சென்று வழிபடுவதைச் சிறப்பாகக் கொள்கின்றனர்.




இது புத்த மதம் தொடர்பான கட்டுரைகளில் நாலாவது கட்டுரை. ஏற்கனவே 3 பகுதிகள் வெளியாகின. நிலாசாரல்.காம்– இல் வெளியானது.

தொடரும்

No comments:

Post a Comment