பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக் கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நற்குணங்கள். அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்களே.
படிக்க எடுத்த பிறகு படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தைத் தூண்டச் செய்கிற புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம். பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடு இட்டு வைக்கக்கூடிய அற்புத வரிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிற புத்தகம் எதுவோ அதுவே சிறந்த புத்தகம். ஒரு முறைக்குப் பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம்.
சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிற கருத்து மணிகளை உள்ளடக்கியிருக்கிற நூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல நண்பர்களைப் பெறுதல் அரிது. நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல நண்பர்கள் "நல்ல புத்தகங்களே".
தூங்கச் சென்றவன் தூக்கம் வருவதற்காக புத்தகத்தைப் புரட்டுகிறபோது எந்தப் புத்தகம் அவனைத் தூங்க விடாமல் புரட்டிப் போடு கிறதோ, சொக்க வைக்கும் தூக்கத்தில் படிக்கும் போதும் எந்த நூல் ஒருவனை விழிப்படையச் செய்கிறதோ அதுவே சிறந்த புத்தகம். நல்ல நூல்களைப் படிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிக நேரமாகும்.
நூல்களை அரிய செல்வமாகப் பல நாட்டினரும் மதித்துப் போற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண்போம்.
சீன நாட்டிலிருந்து வந்த யுவான் சுவாங் என்னும் அறிஞர் நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின் சில காலம் அங்கேயே பேராசிரிய ராகவும் இருந்தார். பின் தாயகம் திரும்பி, புத்தமதப் பிரச்சாரம் செய்ய விரும்பினார். அதற்காகச் சில அறநூல்களையும் தம்முடன் எடுத்துச் சென்றார். மாணவர்கள் பலர் வழியனுப்பச் சென்றனர். படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தது. அப்போது புயல் வீசியது. படகு கவிழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சினர். யுவான் சுவாங் தாம் கற்றவையனைத்தும், கொண்டு செல்ல நினைத் தவைனைத்தும் பயனற்றதாகிவிடுமோ என்று முகம் வாடினார். அதுகண்ட மாணவர்கள் பாரம் குறைந்தால் படகு தப்பக்கூடும் என நினைந்து அறிவுச்செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல என்பதனையும் நினைத்து ஆற்றில் குதித்து விட்டனர். அது அவர்களைத் தனதாக்கிக் கொண் டது. யுவான் சுவாங்கும் அறிவு நூல்களோடு இந்திய மாணவர்களின் தியாக உணர்வையும் சுமந்து கொண்டு கரைசேர்ந்தார். இதயத்தைத் தொடும் நிகழ்ச்சி மட்டுமன்று இது. இமயத்தை எட்டும் உயரிய நிகழ்ச்சியும் இது எனலாம்.
கி.பி. 23-74 இல் வாழ்ந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த “பிளினி” என்பவர் தம் நூலில் குறிப்பிடும் ஒரு செய்தி,
“அரசர் டாரியஸ் மீது அலெக்ஸாந்தர் படையெடுத்துச் சென்று அவரைத் தோல்வி பெறச் செய்தபோது, அப்போர்க் களத்தில் வீரர் ஒருவர் உடலுக் கடியில் பொன்னால் செய்த கூடையொன்றில் நவரத்தினங்கள் பலவும் மலர்களும் திணித்து மற்றும் நறுமணப் பொருள்களும் நிரப்பி வைத்திருப்பதைக் கண்டார். அவ்வரிய கூடையின் பயனைப் பற்றி அலெக்ஸாந்தரின் வீரர்கள் பலர் பலவிதமாக எடுத்துக் கூறினர். ஆயினும் அவர்கள் கூறுவதைக் கவனமாகக் கேட்டுவிட்டு “இருப்பினும் கடவுள் ஹெர்குலிஸ் சாட்சியாகக் கூறுகிறேன். இக்கூடை ஹோமர் அவர்களுடைய காவியத்தை வைத்துப் பாதுகாக்க மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று ஆணையிட்டார்.
இதனாலும் நூல்கள் எந்த அளவு போற்றிக் காக்கப்பட்டன என்பதை அறிகிறோம்.
No comments:
Post a Comment