audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Thursday, July 8, 2021

பாசிசம்



By C.P.சரவணன் | 






பாசிசம் (Fascism)



பெனிடோ முசோலினி



இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தீவிர அரசியல் சித்தாந்தங்களுக்குள் பாசிசமும் ஒன்றாகும். பாசிச சித்தாந்தத்தின் தந்தையாக இத்தாலியின் சர்வாதிகாரியாகிய பெனிடோ முசோலினி (Benito Mussolini) கருதப்படுகிறார். 1922-ஆம் ஆண்டு முசோலினையும் அவரது பாசிசக் கட்சியும் இத்தாலியில் பதவிக்கு வருவதோடு பாசிசக் கோட்பாடும் ஆரம்பமாகிறது. 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியில் பதவிக்கு வரும் சர்வாதிகாரி அடொல்ப் ஹிட்லர் (Adolph Hitler) முசோலினியை பின்பற்றி நாசிசம் (Nazism) என்ற பெயரில் பாசிசக் கோட்பாட்டை உருவாக்கினார்.

பாசிசம் என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும். முதலாளிகள் இவ்வதிகார வர்க்கத்திற்குள் அடங்குவர். ஆரம்ப கட்டங்களிலே அடிமட்ட மக்களின் ஆதரவும் இவ்வதிகார வர்க்கத்திற்கு கிடைக்கும். முசோலினியின் இத்தாலி, ஹிட்லரின் ஜெர்மனி பாசிசத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும். தனியுரிமை முதலாளித்துவத்தின் தேய்ந்த நிலையே பாசிசம் என மார்க்சியவாதிகள் அதனைக் கண்டிப்பதுண்டு. மார்க்சியவாதிகளின் இந்தக் கண்டனத்திலே உண்மை அதிகம் இருந்தபோதிலும், சில முக்கியமான விடயங்களைக் கருத்திலே கொள்ளாதிருக்கின்றது. தனியுரிமை, முதலாளித்துவம் கையாலாகாத நிலையில் பாசிசத்தைச் சரணடைகின்றது என்பது உண்மையே.

பாசிச தத்துவத்தின் மூலகங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தீவிர தத்துவங்களிலிருந்து பெறப்பட்டதாகும். எடுத்துக்காட்டாக நீட்சேயின் (Nietzsche) அதிமானுடன் (Superman) என்ற அதிகாரக் கோட்பாட்டினாலும் சொரல் (Sorel) இன் பலாத்காரக் கோட்பாட்டினாலும் ஹெகல் (Hegel) இன் அரசை மேம்படுத்தும் வாதங்களினாலும் பாசிசம் பெருமளவிற்கு வளர்ந்திருந்தது அத்துடன் மாக்கியவல்வியின் கருத்துக்களாலும் முசோலினி கவரப்பட்டிருந்தார்.

பாசிசம் என்ற சொல் பாஸ்சியோ (Fascio) அல்லது பாஸ்சி (Fasci) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இத்தாலிய சொல்லாகிய Fascio என்பதற்கான பொருள் இறுக்கமாக கட்டப்பட்ட தடிக்கட்டு (well tied bundle of nods) என்பதாகும். பாசிசம் இத்தாலிய இராணுவத்திற்குள் ஐக்கியம், பலம், ஒற்றுமை என்பவற்றை இறுக்கமாக ஏற்படுத்த முயலுகிறது. புராதன உரோமானிய இராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட கோடரிச் (Axe) சின்னமே பாசிச இராணுவத்தின் சின்னமாக பயன்படுத்தப்பட்டது.

அரசின் மகிமைக்காகத் தன்னுடைய எல்லாவற்றையும் அதற்கு அர்ப்பணம் செய்ய வேண்டுமென்ற அடிப்படையிலே தான் பாசிச இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாசிஸ் என்பது ரோமானியப்பேரரசின் நீதிபதிகள் உருட்டுக் கட்டைகளுக்கு நடுவே கோடாரி சொருகப்பட்டிருக்கும் ஒரு ஆயுதம் வைத்திருப்பார்கள். இந்த ஆயுதத்திற்குப் பெயர் பாசிஸ் எனப்படும்.



தோற்றமும் பின்னனியும்

முதலாம் உலகப் போரில் பாசிசம்

ஆகஸ்ட் 1914 ல் முதலாம் உலகப் போர் வெடித்தபோது, இத்தாலிய அரசியல் இடதுகள் போரில் அதன் நிலைப்பாட்டை கடுமையாக பிரித்தனர். இத்தாலிய சோசலிஸ்ட் கட்சி (PSI) போரை எதிர்த்தது, ஆனால் பல இத்தாலிய புரட்சிகர சிண்டிகலிஸ்டுகள் ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி ஆகியோருக்கு எதிராக போருக்கு ஆதரவு கொடுத்தனர். அவர்கள் பிற்போக்குத்தன ஆட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் சோசலிசத்தின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்பினர்.

ஏஞ்சலோ ஒலிவியேரோ ஒலிவேட்டி அக்டோபர் 1914-ல் சர்வதேச இத்தாலிய காம்பாட் படைகள் என்றழைக்கப்படும் ஒரு சார்பு-தலையீடு குழுவை அமைத்துள்ளார். பெனிட்டோ முசோலினியின் ஜெர்மனிய எதிர்ப்பு நிலைப்பாட்டின் காரணமாக PSI இன் பத்திரிகையான அவந்தியின் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். "பாசிசம்" என்ற வார்த்தை முதன் முதலில் 1915-இல் முசோலினியின் இயக்கமான சர்வதேச இத்தாலிய காம்பாட் படைகள் உறுப்பினர்களால் பயன்படுத்தப்பட்டது. 1917 அக்டோபர் புரட்சி, விளாடிமிர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவில் அதிகாரத்தை கைப்பற்றினர். இது பாசிசத்தின் வளர்ச்சியை பெரிதும் அதிகரித்தது.1917-ல், முசோலினி, புரட்சிகர நடவடிக்கை பாசிச தலைவர், அக்டோபர் புரட்சியை பாராட்டினார். ஆனால் பின்னர் அவர் லெனினுடன் ஒத்துப் போகவில்லை, அவரை ஜார் நிக்கோலஸின் ஒரு புதிய பதிப்பாக மட்டுமே கருதினார்.

நாம் சோசலிசத்திற்கு எதிரான போரை அறிவிக்கின்றோம், ஏனென்றால் அது சோசலிசம் என்பதற்காக அல்ல, மாறாக அது தேசியவாதத்தை எதிர்க்கிறது என்பதற்காகவே. சோசலிசம் என்னவென்பது பற்றி விவாதிக்கலாம் என்றாலும், அதன் வேலைத்திட்டம் என்ன, அதன் தந்திரோபாயங்கள் என்னவென்றால், ஒன்று தெளிவாக உள்ளது: அதிகாரபூர்வ இத்தாலிய சோசலிஸ்ட் கட்சி பிற்போக்குத்தனமாகவும் முற்றிலுமாகப் பழமைவாதமாகவும் உள்ளது. அதன் கருத்துக்கள் நிலவியிருந்தால், இன்றைய உலகில் நம் உயிர் பிழைத்திருப்பது சாத்தியமற்றது.

முதலாம் உலகப் போரின் பின்னர் வெற்றி பெற்ற நாடுகளுக்கும் தோல்வியடைந்த ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளுக்கும் இடையே வெர்சைல்ஸ் (Versailles) உடன்படிக்கை ஏற்பட்டது. இவ் உடன்படிக்கை வெற்றி பெற்ற நாடுகளுக்கு சாதகமாகவும் தோல்வியடைந்த நாடுகளுக்கு பாதகமாகவும் அமைந்தது. இவ் உடன்படிக்கை இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகளின் தேசிய நலன் தேசிய கௌரவம் போன்றவற்றிற்கு பெரும் சவாலாக மாறியது.

வெர்சையில் உடன்படிக்கையினைப் பயன்படுத்தி நேசநாடுகள் இத்தாலியையும் ஜெர்மனியையும் பல கூறுகளாகப் பிரித்ததுடன் பல பிரதேசங்களை தமதாக்கிக் கொண்டன. இத்தாலி மற்றும் ஜெர்மனியின் குடியேற்றங்கள் பாதிக்கப்பட்டன. அத்துடன் பெருந்தொகைப் பணத்தினை நஷ்ட ஈடாக நேச நாடுகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கூறியது.

யுத்தத்தின் தோல்வியினால் அவமானமும் வெட்கமும் அடைந்திருந்த இவ்விருநாடுகளுக்கும் வெர்சையில் உடன்படிக்கை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. வேலையில்லாப் பிரச்சினை, பணவீக்கம் என்பன பெரும் பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்தன. இப்பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய நிலையில் இந்நாடுகளின் அரசாங்கங்கள் காணப்படவில்லை.

ஆட்சியாளர்கள் நேச நாடுகளின் கைப்பொம்மைகளாகவே காணப்பட்டனர். இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள் வர்த்தகர்கள், படை வீரர்கள் போன்ற பல்வேறு பிரிவினர்களிடமும் அதிருப்தி ஏற்பட்டது. இக்காலத்தில் இவ்விரு நாடுகளிலும் சோசலிஸ்ட்டுகள் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தார்கள். இச்சூழ்நிலையினை முசோலினையும் ஹிட்லரும் நன்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

தேசிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்களாலோ சோசலிஸ்ட்டுகளாலோ முடியாது என பிரச்சாரம் செய்யத் தொடங்கினர். முசோலினியின் பிரச்சாரம் பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு முசோலினி மீது நம்பிக்கையினை ஏற்படுத்தத் தொடங்கியது. முசோலினிக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் தொழிலாளர்கள் எழுச்சியை முறியடிக்க ஏனைய வர்க்கத்தினர் முற்பட்டனர்.

சகல பிரிவினரது ஆதரவைப் பெற்றுக் கொண்ட முசோலினி இத்தாலியின் பண்டைய பெருமைகளையும் வரலாறுகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் கலாசார மேன்மைகளுக்கு புத்துயிரளிக்கப் போவதாக உறுதியளித்தார். தமது முன்னோர்களின் வீரதீர செயல்களை விளக்கி தேசிய உணர்வுகளை மக்களுக்கு ஊட்டினார். ஓருதலைப்பட்சமான வெர்சையில் உடன்படிக்கை கிழித்தெறியப்பட வேண்டும். நேச நாடுகள் வஞ்சம் தீர்க்கப்படல் வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தார். தாம் அனுபவித்து வந்த பல்வேறு விதமான பிரச்சினைகள் மன உளைச்சல்களிலிருந்து விடுபட விரும்பிய மக்கள் முசோலினியை தேசியத் தலைவராக ஏற்றுக் கொண்டனர். ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியதும் மக்கள் அபிப்பிராயங்களையோ சர்வதேச நியதிகளையோ மதிக்காத சர்வாதிகாரியாக இவர் பின்னர் மாறினார்.

பாசிசத்தின் இயல்புகள்

பாசிசம் அதிகாரம் மிக்க ஒரு தலைவனையும் அத்தலைவனை கண்மூடித்தனமாக பின்பற்றும் மக்கள் கூட்டத்தினையும் கொண்ட அரசாங்க முறையாகும். இது அகிம்சை, சமாதானம், சோசலிசம், ஜனநாயகம், தனிமனித வாதம் என்பவற்றை நிராகரிக்கின்றது. பொய், பகட்டு, அடக்குமுறை, சந்தர்ப்ப வாதம், அதிகார ஆசை, போர் வெறி போன்றவற்றில் நம்பிக்கை கொண்டதோர் தத்துவமாகும்.

பாசிஸ்ட்டுக்கள் தங்கள் கோட்பாடுகளுக்கு தெளிவான விளக்கங்களை முன்வைப்பதில்லை. கோட்பாட்டை விட செயற்பாட்டிலேயே நம்பிக்கை கொண்ட இவர்கள் செயற்பாட்டினை நியாயப்படுத்த கோட்பாட்டை உருவாக்குபவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கோட்பாட்டையும் செயற்பாட்டையும் மாற்றியமைத்துக் கொள்பவார்கள்.. நம்பு, கீழ்ப்படி, போர்புரி என்பதே இவர்களின் உபதேசமாகும். மிகவும் உறுதியாக மையப்படுத்தப்பட்ட அதிகாரம், எதிர்க் கட்சியில்லாமை, விமர்சனம் இல்லாமை, தேசத்தின் எல்லா விடயங்கள் மீதான கட்டுப்பாடு, ஆக்கிரமிப்புத் தேசியவாத உணர்வு, கம்யூனிச எதிர்ப்பு போன்ற பண்புகள் இவர்களிடம் காணப்படுகிறது.

பாசிசம் அரசை மேன்மைப்படுத்தும் தத்துவமாகும். 'அரசுக்காக மக்களேயன்றி மக்களுக்காக அரசு இல்லை' என இவர்கள் கூறுகின்றார்கள். இதன் மூலம் ஜனநாயகத்தினை பாசிசம் நிராகரிக்கிறது. பாசிசம் தனியொரு கட்சியை கொண்ட ஒரு ஆட்சி முறையாகும். பாசிசவாதிகள் தமது கட்சி அங்கத்தவர்களை இராணுவ நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

பாசிசம் சர்வ அதிகாரங்களும், சர்வ வல்லமையும் கொண்ட தனியொரு ஸ்தாபனமாக அரசை உருவாக்குகின்றது. முசோலினி தனது பாசிசக் கோட்பாடு பற்றி பின்வருமாறு கூறுகின்றார். “எல்லாம் அரசிற்குள்ளேயே இருக்கிறது. அரசிற்கு எதிராக அரசிற்கு உள்ளேயும், வெளியேயும் எதுவும் இல்லை. பாசிச அரசில் வெகுஜன தொடர்பு சாதனங்கள், கல்வி முறைமைகள் அனைத்தும் அரசின் பூரண கட்டுப்பாட்டிலிருக்கும். இவைகளினூடாக பாசிசம் தனது பிரச்சாரங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ளும். பாசிசத்தில் பலாத்காரம் என்பது நிரந்தரமானதாகும். அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும், வளர்ப்பதற்கும் எதிரிகளை ஒழிப்பதற்கும், பலாத்காரமே தேவையாகும். இரகசிய போலிஸ் பிரிவின் மூலம் எதிரிகளை இனம் கண்டு இராணுவ நீதிமன்றங்களுடாக கடுமையான தண்டனை வழங்கி பலாத்கார ஆட்சி நடத்தப் படவேண்டும்.

பாசிசம் தனிமனிதனையோ சமூகங்களையோ மதிப்பதில்லை. தனிமனிதன் அரசிற்கு அடிபணிய வேண்டும். தனிமனிதன் தனது உரிமைகளை வலியுறுத்தாமல் சமூகக் கடமைகளில் அக்கறை காட்ட வேண்டும். தனிமனிதனை அறிவாளியாகவோ ஆற்றல் மிக்கவனாகவோ ஆளத்தகுதியானவனாகவோ பாசிசம் கருதுவதில்லை. இதன் மூலம் பாசிசம் உயர்குழாம் ஆட்சியை வலியுறுத்துகிறது. மாக்ஸிசம் கூறும் இருவர்க்கக் கோட்பாட்டிற்கு மாறாக பலவர்க்கக் கோட்பாட்டினை முன்வைத்து சமுதாயத்தில் பல வர்க்கங்கள் உள்ளன என கூறுகிறது. சமுதாயத்தில் வர்க்கப் பிரிவுகள் தவிர்க்க முடியாது நிலை பெற்றுள்ளது எனப் பாசிசம் கூறுகிறது.

பாசிச அரசு இனவாதத்தை முதன்மைப்படுத்தும் ஒன்றாகவுள்ளது. நோர்டிக் எனப்படும் கலப்பற்ற தூய ஆரிய இனத்தை முதன்மைப்படுத்துகிறது. ஆரிய இனத்தின் தனித்துவமும் கலாசார மேன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருவனை மதிப்பீடு செய்வதற்கு அவன் பிரதிநிதித்துவம் செய்யும் இனமே தகுந்த அளவு கோல் ஆகும். ஆரிய இனமே உலகில் தலை சிறந்த இனம். அவர்களே உலகை ஆளப்பிறந்தவர்கள். ஏனைய இனங்கள் அவர்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். யூத இனத்தை கலப்பு இரத்தத்தில் உருவாகியவர்கள் என பாசிசம் இழிவுபடுத்துகிறது. ஆரிய இனத்தின் தூய்மையினையும் மகிமையினையும் பேணும் நோக்கில் யூதர்கள் படுகொலை செய்யப்பட வேண்டும் எனப் பாசிசம் கூறுகிறது.

சர்வதேச மட்டத்தில் ஏகாதிபத்திய கோட்பாட்டை பாசிசவாதிகள் ஏற்றுக் கொண்டார்கள். ஏகாதிபத்திய இலக்கினை அடைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். இதற்காக யுத்தத்தினையும் பலாத்காரத்தினையும் நம்பினார்கள். போர் பிரியர்களாகிய இவர்கள் வரலாற்றில் எதுவுமே இரத்தம் சிந்தாமல் வெல்லப்படவில்லை என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவர்களாகும். முசோலினி இது தொடர்பாக கூறும் போது சமாதானமாக வாழ்நாள் முழுவதும் வாழ்வதை விட போர்க்களத்தில் செலவிடும் ஒரு நிமிடம் மேலானது. ஏகாதிபத்தியம் என்பது வாழ்வின் நிலையானதும் மாற்ற முடியாததுமான விதியாகும் என்கின்றார். சமாதானத்தினை நிராகரிக்கின்ற இவர்கள் சமாதானம் என்பது நிலையானதோ நடைமுறைச் சாத்தியமானதோ அல்ல என்கிறார்கள். உலக சமாதானம் ஒரு கோழையின் கனவு எனக் கூறும் இவர்கள் பிறநாடுகளை படைபலத்தால் கைப்பற்றி ஏகாதிபத்தியக் கொள்கையினை நிலைநாட்டுவதிலேயே தமது தனித்துவம் தங்கியிருக்கிறது என்கிறார்கள்.

-பெனிட்டோ முசோலினி.



பாசிஸ்டுகளின் அறிக்கை

1919 ஆம் ஆண்டில், அல்கெஸ்ட் டி ஆம்பிரீஸ் மற்றும் ஃபுயூச்சரிஸ்ட் இயக்க தலைவர் ஃபிலிப்போ டோமாசோ மரினெட்டி ஆகியோரால் இத்தாலிய காம்பாட் படையின் அறிக்கை (பாசிச அறிக்கை) உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கையானது ஜூன் 6, 1919 அன்று பாசிச செய்தித்தாள் Il Popolo d'Italia இல் வழங்கப்பட்டது. ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு பிராந்திய அடிப்படையில் விகிதாசார பிரதிநிதித்துவத்திற்கான உலகளாவிய வாக்குரிமை உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை இந்த அறிக்கை ஆதரித்தது. தொழில், போக்குவரத்து, பொது சுகாதாரம், தகவல்தொடர்புகள் போன்றவை உட்பட, அந்தந்த பகுதிகளில் சட்டமியற்றும் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், நடத்துவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிபுணர்களாலும் வர்த்தகர்களிடமிருந்தும் தேர்வு செய்யப்பட்ட நிபுணர்களின் "தேசிய கவுன்சில்களின்" ஒரு கூட்டு நிறுவன அமைப்பு மூலம் அரசாங்க பிரதிநிதித்துவம். மற்றும் இத்தாலிய செனட்டின் ஒழிப்பு ஆகியவற்றை இந்த அறிக்கை ஆதரித்தது.



சிவப்பு ஆண்டுகள்

1920-ல், தொழில்துறைத் தொழிலாளர்கள் மேற்கொண்ட போர்க்குணமிக்க வேலைநிறுத்தம் இத்தாலியில் உச்சத்தை அடைந்தது; 1919 மற்றும் 1920 ஆகியவை "சிவப்பு ஆண்டுகள்" என்று அறியப்பட்டன. முசோலினி மற்றும் பாசிஸ்டுகள் ஆகியோர் நிலைமைகளைப் பயன்படுத்தி தொழிற்துறை தொழிலதிபர்களுடன் இணைந்து, தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இத்தாலியில் உள்ள ஒழுங்கு மற்றும் உள்நாட்டு சமாதானத்தை காப்பாற்றுவதாகக்கோரி தாக்கினர்.

முதலாம் உலகப் போரில் தலையிட்டதை எதிர்த்த இடதுசாரிகளின் பெரும்பான்மையான சோசியலிஸ்டுகளை பாசிசவாதிகள் தங்கள் முக்கிய எதிரிகளாக அடையாளம் கண்டனர்.பாசிஸ்டுகளும் இத்தாலிய அரசியல் உரிமையும் பொதுவான நிலையைக் கொண்டிருந்தன: இருவரும் மார்க்சிசத்தை அவமதித்தனர், வர்க்க நனவை கருத்தில் கொள்ளவில்லை மற்றும் பிரமுகர்களின் ஆட்சியில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.



முசோலினி அதிகாரத்தில் பாசிச இத்தாலி​

இத்தாலியின் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், முசோலினி ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் பாசிஸ்ட்டுகள் இத்தாலிய பாராளுமன்றத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. முசோலினியின் கூட்டணி அரசாங்கம் ஆரம்பத்தில் பொருளாதாரத் தாராளவாத கொள்கைகளை பொருளாதார மந்திரி அல்பர்ட்டோ டி ஸ்டீபனி (மையக் கட்சியின் உறுப்பினர்) தலைமையின் கீழ் தொடர்ந்து கொண்டது. இதில் பட்ஜெட் சமநிலைப்படுத்தப்பட்டது உட்பட உள்நாட்டுச் சேவைக்கு ஆழமான வெட்டுக்கள் இருந்தன. ஆரம்பத்தில், அரசாங்க கொள்கைகளில் கடுமையான மாற்றம் ஏற்பட்டது, அடக்குமுறையான போலிஸ் நடவடிக்கைகள் குறைவாக இருந்தன.

பாசிஸ்டுகள் இத்தாலியில் பாசிசத்தை ஏசர்போ சட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் முயற்சியைத் தொடங்கினர், இது நாடாளுமன்றத்தில் எந்தவொரு கட்சி அல்லது கூட்டணி பட்டியலில் 25% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்றது என்று வாக்குறுதி அளித்தது. கணிசமான பாசிச வன்முறை மற்றும் அச்சுறுத்தல் மூலம், பெரும்பாலான வாக்குகள் பாசிஸ்டுகளுக்கு செல்வதற்கு பல இடங்களை அனுமதித்தன. 3 ஜனவரி 1925 அன்று, முசோலினி பாசிச மேலாதிக்க இத்தாலிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார் மற்றும் அவர் என்ன நடந்தது என்பதை தனிப்பட்ட முறையில் பொறுப்பாளராக அறிவித்தார், ஆனால் அவர் தவறு எதுவும் செய்யாததாக வலியுறுத்தினார். அவர் தன்னை சர்வாதிகாரியாக பிரகடனப்படுத்தினார். அரசாங்கத்தின் மீது முழு பொறுப்பையும், நாடாளுமன்றத்தை பதவி நீக்கம் செய்வதையும் அறிவித்தார். 1925 முதல் 1929 வரை, பாசிசம் சீராக வளர்ந்தது: எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது, தணிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது.



தீவிரமான வெளியுறவுக் கொள்கை

1920-களில் பாசிச இத்தாலி கடுமையான வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தது, இது கிரேக்கத் தீவான கோர்ஃபூ மீதான தாக்குதலை உள்ளடக்கியத. பாசிஸ்டுகள் பால்கன் பகுதியில் இத்தாலிய எல்லையை விரிவுபடுத்த நோக்கம் கொண்டனர், துருக்கி மற்றும் யூகோஸ்லாவியாவிற்கு எதிரான போரை நடத்துவதற்கான திட்டம் தீட்டினர், யூகோஸ்லாவியாவை உள்நாட்டு யுத்தத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுத்தனர், மற்றும் இத்தாலியின் தலையீட்டை சட்டபூர்வமாக்குவதற்கு மாசிடோனிய பிரிவினைவாதிகள் மற்றும் அல்பேனியாவை இத்தாலியின் ஒரு உண்மையான பாதுகாப்பாளராக உருவாக்கி, 1927 வாக்கில் இராஜதந்திர வழிமுறைகளால் இவை அனைத்தையும் வெற்றிகரமாக செய்துமுடித்தனர்.

லிபியாவின் எழுச்சிக்கு பதிலிறுப்பாக (லிபியா, அந்த காலப்பகுதியில் ஒரு இத்தாலிய காலனி நாடு) பாசிச இத்தாலி, லிபிய உள்ளூர் தலைவர்களுடன் ஒத்துழைக்கும் முந்தைய தாராளவாத காலனித்துவக் கொள்கையை கைவிட்டது. அதற்கு பதிலாக, இத்தாலியர்கள் ஆப்பிரிக்க இனங்களை விடவும் ஒரு உயர்ந்த இனம் என்று கூறியது மற்றுமின்றி இதனால் இத்தாலியர்கள் "தாழ்ந்த இனமான" ஆப்பிரிக்கர்களைக் கைப்பற்றுவதற்கும் ஆட்சி செய்வதற்கும் உரிமையுண்டு என்றனர். அதற்கு ஏற்ப லிபியாவில் 10 முதல் 15 மில்லியன் இத்தாலியர்கள் குடியேற முற்பட்டனர். இது லிபியாவில் உள்ள பூர்வீக மக்களுக்கு எதிரான லிபிய இனப்படுகொலை என்று அழைக்கப்படும் ஒரு தீவிரமான இராணுவ நடவடிக்கையில் விளைந்தது. இதில் வெகுஜனக் கொலைகள், சித்திரவதை முகாம்களின் பயன்பாடு மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாயப்படுத்தப்பட்ட பட்டினியும் அடங்கும்.

இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின் உருவான நான்கு வகையான முக்கியமான புதிய மாற்றங்களை அய்ஜாஸ் அஹ்மட் (Aijaz Ahmad) பின்வருமாறு விளக்குகிறார்.





அய்ஜாஸ் அஹ்மட்

முதலாவது வகை மாற்றம்

பாசிசம் என்ற சொல் கடும் விவாதத்திற்குள்ளாகிய பின்னணியில், தங்களைப் பெருமையோடு பாசிசவாதிகள் என அழைத்துக் கொண்டவர்களும் நார்ஸி ஜெர்மனியை ஒரு முன்மாதிரியான தேசமாக மகிழ்ச்சியோடு அங்கீகரித்தவர்களும், பாசிசம் ஆதிக்க நிலையில் இருந்த வரை,அதாவது ஹிட்லரின் தோல்விக்கு முன்பு வரை அவ்வாறு இருந்தார்கள். தற்போது அவ்வாறு இருப்பாதாகக் காட்டிக் கொள்வதை கைவிட்டுத் தங்களைத் தேசியவாதிகள் என மட்டும் அறிவித்துக் கொள்கின்றனர். பிரான்சின் தேசிய முன்ணணி, இத்தாலியின் தேசியக் கூட்டணி, முன்னாள் சோவியத் யூனியனிலும் யூகோஸ்லாவியாவிலும் கொலைவெறித் தன்மையுடைய தேசிய வாதமாகவும் இனத் தூய்மைக்கான இயக்கங்கள், இந்தியாவில் இந்து ராஜ்யமும் இந்து தேசியமும் இன்னும் இவை போலப் பலவாகவும் பாசிசம் உருவெடுத்தது.




இரண்டாவது வகை மாற்றம்

இரண்டாவது உலகப்போரின் முடிவின் பின்னணியில் மிக வேறுபட்ட இரண்டு காரணங்களால், வரலாற்றில் முதலாளித்துவத்தின் பல்வேறு காலகட்டங்களில் வெளிப்படையான இனவெறியை நேரடிக் கொள்கையாகத் தக்கவைக்க இயலவில்லை. இதற்கு ஒரு காரணம், காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள் வெற்றி பெற்ற பின்னணியில் ஐரோப்பிய வகைப்பட்ட இனவெறி தன்னை வெளிப்படையாக அறிவித்துக் கொள்ள முடியாமலிருந்தது. மறு காரணம், லத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக நடைமுறைப் படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையின் வடிவங்கள், பாசிசத்தால் எடுத்து வரப்பட்டு, நார்ஸிகளின் பகுத்தறிவற்ற, மேன்மையான இயந்திரத் தொழில் நுட்பத்தால் லட்சக்கணக்கான யூதர்களை விஷவாயு அறைகளில் அடைத்துக் கொன்றமை பாசிச நடைமுறைக்குப் பெரிய சவாலாக இருந்தது. இங்கு, புதிய ஒரு முகத்துடன், வேறுபட்ட வடிவில் தன்னைக் காட்டவேண்டிய தேவை அதற்கு ஏற்பட்டது. இந் நிலையில் தேசியம் என்ற பெயரில் பாசிசம் மீண்டும் எவ்வாறு தலைகாட்ட ஆரம்பித் துள்ளதோ, அவ்வாறே, இனவாதமும் மாயமான வடித்தில் ‘கலாச்சாரம்’, ‘தேசிய கலாசாரம்’ என்றவாறான பெயர்களிலும் மறுபடி தலைகாட்டத் துவங்கியுள்ளது.



மூன்றாவது வகை மாற்றம்

‘தேசம்’, ‘கலாசாரம்;’ ஆகியவற்றை மதத்தோடு இணைத்துப் பார்க்கிற நிலை உருவானது.ஆனால், பழைய ‘மரபு’க்குத் திரும்புகிற வகையிலல்ல. முப்பரிமாணத்தன்மை வாய்ந்த தேசம், கலாசாரம், மதம் சார்ந்த குடிமக்களாக இருப்பது அவசியம் என்று போதிக்கப்பட்டது. அடிப்படைவாத ஈரானைப் போல் ஒருவகையிலும் மிக நவீனமான இஸ்ரேல் போல இன்னொரு வகையிலும் இருப்பது புனிதமானதாகும். இதன் தொடர்ச்சியாக, வெளிப்படையாக இனவாதம் மதிக்கப்பட்ட நாட்களில் ‘மரபணுவியல்’ வகித்த இடத்தை, இப்போது ‘கலாசாரம்’ வகிக்கிறது.


நான்காவது வகை மாற்றம்

இது வர்க்கம் சார்ந்த கோட்பாட்டோடும் எகாதிபத்தியத்தியத்தோடும் தொடர்புடையது. புரட்சிகரமான காலகட்டத்தில், சோசலிசத் திட்டம் உருவான பின்னணியில் உருவான பழைய வகை பாசிசம், காலனி எதிர்ப்புத் தேசியவாதம் காலனிகளில் உருவான பின்னணியில் தனக்கென உருவாக்கிக் கொண்ட ஒருவகையான தேசபக்த சிந்தனைகளோடு, தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளிலிருந்தும் குட்டி பூர்ஷ்வாக்களிடமிருந்தும் சிறிய முதலாளிகளிடமிருந்தும் ஒரு வகையான வர்க்கத் தீவிரவாதத்தை வளர்த்துக் கொண்டது. நார்ஸிகள் தங்களைத் ‘தேசிய சோசலிஸ்டுகள்’ எனறு அழைத்துக் கொண்டனர். முசோலினி முதலில் சோசலிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற தலைவராக இருந்து, பின்னர் பாசிசத்தின் அமைப்பாளராக மாறி, பாசிச அரசின் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்தவராவார். அடிப்படையில் அதன் ‘தேசியம்’ பெருமளவும் ஏகாதிபத்தியச் சார்புடையது. அதன் வர்க்கத் தீவிரவாதத்திற் பெரும் பகுதி மக்களைக் கவர்வதற்காகச் சொல்லப்பட்டதே. பாசிசம், பின்னர் அவற்றைக் கைவிட்டு, முற்றாக ஏகாதிபத்திய மூலதனத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது.

நியாயமாகச் சிந்தித்துப் பார்த்தால், போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான பாசிசத்தை உலக எதிர்ப் புரட்சியின் ஈர்ப்பு மையம் எனக் கூறலாம். எனினும் அவர்களும் தங்களைப் புரட்சி வாதிகளாகவே கூறிக் கொண்டனர். தீவிர வலதுசாரித் தன்மையோடு இணைந்து ஏகபோக முதலாளித்துவம் நம்மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் காலம் வரை, பாசிசத்திற்கெதிராகப் போராடுமாறு நாம் நிர்ப்பந்திக்கப் படுவோம். அதிகபட்ச லாபங்களை அடையும் தனது பாதையில் இதர வடிவங்களில் அமைந்த ஆட்சிமுறைகள் தடைக்கற்களாக மாறும்பொழுது ஏகபோக முதலாளித்துவம் பாசிசத்தை ஆதரிக்கச் சற்றும் தயங்காது.

ஏகபோக முதலாளித்துவம், அதனுடைய பொதுவான நெருக்கடிக் காலகட்டத்தில், மிக உச்சமான தொழில் லாபமடையும் கொள்கைகளைப் பின்பற்ற முடியாது. அத்தகைய கொள்கைகட்கு எதிராக மக்கள் தலையிடக்கூடிய குறைந்தபட்ச சாத்தியப்பாடொன்றை ஜனநாயக அமைப்புகள் ஏற்படுத்தினாற்கூட ஏகபோக முதலாளித்துவம் அத்தகைய அமைப்புகளை ஒழித்துக்கட்ட முனையும். ஜனநாயக ஆட்சிக்குப் பதிலாகப் பிற்போக்கான ராணுவ ஆட்சிகளைக் கொண்டு வர முற்படும். பாசிசம் என்பது அத்தகைய பெருந்தொழில், பெருவர்த்தக சர்வாதிகாரங்களின் மிகவும் கொடூரமான, நாசகரமான, வளர்ச்சியடைந்த வடிவமேயாகும்.

பாசிசம் என்பது ஏகபோக மூலதனத்தின் மேல்தட்டு வட்டாரங்களின் மிகவும் பிற்போக்கான பகுதியினருடைய அப்பட்டமான, அதிகொடூரமான சர்வாதிகாரம் என்று விளக்குவது அவசியம். அவ்வாறு தான் உண்மையான பகைவனைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டி அவனுக்கெதிரான போராட்டத்தை நடத்த இயலுமாகும். அதன் பிறகே பாசிசத்திற்கெதிராகப் பரந்துபட்ட இயக்கத்தை அணிதிரட்ட இயலுமாகும். பாசிசமானது, முதலாளித்துவத்தின் தத்துவார்த்தக் கருவிகளைக் கைக்கொண்டு அவற்றைப் பெரும் ஆயுதங்களாக ஆக்கியுள்ளது. ஜெர்மனியில் ஹிட்லரின் பாசிசம், கம்யூனிச எதிர்ப்பையும் யூத எதிர்ப்பையும் தன் பிரதான அரசியல், தத்துவார்த்தக் கருவிகளாக ஆக்கிக் கொண்டது. இத்தாலிய பாசிசம் கம்யூனிச எதிர்ப்பையும் இனவெறியையும் தன் பிரதான கருவிகளாகப் பயன்படுத்தியது.

பாசிசத்தால் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளைத் தீர்க்க முடியவில்லை. பல காலமாக அது அவற்றை மூடி மறைத்திருந்தது. ஆனால் ஏதாவதொரு வழியில் அவை தொடர்ந்து தலை தூக்க ஆரம்பித்தன. இவ்வாறு பாசிசத்திற்கெதிரான போராட்டங்களுக்குப் புதிய வாய்ப்புக்கள் தோன்றின. போராட்டத்திற்கான சாத்தியப்பாட்டை முரண்பாடுகள் திறந்துவிட்டாலும் அணிதிரட்டிய வெகுஜனப் போராட்டத்தின் மூலம் மட்டுமே பாசிசத்தைத் தோற்கடிக்க முடியும்.


பாசிசத்தின் பலமுகங்கள்


புதிதாக நடைபெற்ற போர்கள், பெரும் காலனியாதிக்கச் சக்திகள் தங்களுக்கிடையே உலகைப் பங்கிட்டுக் கொண்ட பிறகு, உலகை மீளவும் மறுபங்கிடுவதற்கான போர்களாயிருந்தன. இந்நிலையில், போட்டி என்பது, யாரும் கைப்பற்றாத பகுதிகளைக் கைப்பற்றுவதுடன் அல்லாமல், காலனியாதிக்க சக்திகள் தங்களுக்கென ஒதுக்கி வைத்திருந்த ஏற்றுமதிச் சந்தைகள், முடிவு உற்பத்திப் பொருட்களுக்கான மூலவளங்கள், முதலீட்டு வாய்ப்புகள் போன்றவற்றுக்குமாக இருந்தது. ‘உலக மகாயுத்தம்’ என அழைக்கப்பட்ட, உலகின் மிகப் பெரிய சூதாட்டக்களமாக, அவ்வளவு நாடுகள் பங்கேற்ற போர் வரலாற்றில் இதுவரை காணாத ஒன்றான இதன் பின்ணணியிலேயே பாசிசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சியின்போது அதற்கெதிராகப் போராடியவர்களில் முக்கியமான ஒருவரான டோளியாட்டி (Togliatti) தனது அனுபவங்களின் அடிப்படையில் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார்.

பாசிசம் என்பது முதலாளித்துவ நாடுகளில் ஒரு அபாயமாக உள்ளது. ஆனால் அது தவிர்க்க முடியாத வளர்ச்சிக் கட்டமல்ல. பாசிசத்தால் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையும் முதலாளித்துவ அடிப்படையில் தீர்க்க முடியாது. எனவே அடிப்படையான வர்க்க முரண்பாடும் வர்க்கப் போராட்டமும் தொடரும்.பாசிசம் அதிகாரத்திலிருக்கும் பொழுது, மிக மோசமான நிலைமைகளிலும் கூட ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்கி பாசிசத்தைத் தோற்கடிப்பதற்குப் போராடுவது சாத்தியமே. பாசிசமானது தன்னுடைய சொந்த உள் முரண்பாடுகளால் நொறுங்கி விழுந்துவிடாது.





எரிக் ஃப்ரோம்

பாசிசத்தை உளவியல் முறையில் ஆராய்ந்த எரிக் ஃப்ரோம் (Eric Fromm) 1941-ல் வெளியிட்ட தனது “விடுதலையிலிருந்து தப்புதல்” (Escape from Freedom ) என்ற தனது நூலில் முதலாளிய சமூகத்தின் விடுதலை உணர்வு மனிதனுக்குச் சில பொறுப்புகளையும் சுமத்துகிறது. முதலாளியத்தால் தனியராக்கப்படும் மனிதர் தனது தேவைகள், நலன்கள் ஆகியவற்றைத் தானாகவேதான் சாதித்துக் கொள்ள வேண்டும். சந்தையின் போட்டி, வெற்றி தோல்விகள் ஆகியவற்றை நேரடியாகத்தான் சந்தித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறு, விடுதலை மனிதரைத் தனிமனிதராக்கி விடுகிறது. தலைக்கு மேலும் காலுக்குக் கீழும் எதுவுமில்லாதது போன்ற நிலை அவருக்கு ஏற்படுகிறது. ஒரு விதமான பாதுகாப்பு உணர்வுக்கு மனிதர்கள் ஏங்குகின்றனர். தலைக்கு மேலே ஒரு பியூரர் (தலைவர்: இங்கு ஹிட்லரைக் குறிக்கும்), காலுக்குக் கீழே ஆரிய ஜெர்மானிய இனம், உடன் நடக்கவும் உரத்துக் கோஷமிடவும் ஒரு பெரிய கூட்டம், இவையெல்லாம் மனிதருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை, ஆதரவைத் தருகின்றன. தனிமையிலிருந்து தப்பித்து விட்டதாக மனிதர் உணர்கின்றனர். இதுதான் பாசிசம் என்று எரிக் ஃப்ரோம் எழுதினார்.




ஹேர்பேட் மார்க்யூஸ்

பாசிசத்தை ஆய்வு செய்தவர்களில் முக்கியமானவர் ஹேர்பேட் மார்க்யூஸ் (Herbert Marcuse) இவர் 20-ம் நூற்றாண்டின் முக்கியமான நவமார்க்சியராகக் கொள்ளப்படுபவர். பாசிசத்தின் தோற்றத்திற்கும் ஐரோப்பிய சமூகத்தில், குறிப்பாக ஜெர்மானிய வரலாற்றில் நீண்ட காலமாக வழக்கில் இருக்கும் உடன்பாட்டுக் கலாசாரத்திற்கும் (Affirmative culture) உட்தொடர்பு உள்ளதாக சொல்லும் மார்க்யூஸ் இடைக்கால ஜெர்மனியில் வழக்கிலிருந்த மேட்டுக்குடிக் கலாசாரத்தைத் தீவிரமாக மறுதலித்து (Negate) விமர்ச்சிக்காமல் அக்கலாசாரத்துடன் உடன்பட்ட நிலையிலேயே நவீன ஜெர்மானிய கலாசாரம் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது என்கிறார். எனவே அதனை மார்க்யூஸ் உடன்பாட்டுக் கலாசாரம் என்கிறார். கலாசார வாழ்வில், இடைக்கால மேட்டுக்குடிச் சமூக விழுமியங்கள் ஆன்மீகம் என்ற அடைமொழியுடன் தங்கி நிற்கின்றன. அவை சராசரி மனிதனின் அன்றாட வாழ்விலும் அவ்வாழ்வின் தேவைகளிலும் அக்கறையின்றி அவற்றை இழிநிலையில் வைத்துப் பார்க்கின்றன.

சமூக முரண்பாடுகளையும் மக்கள் பிரச்சினை களையும் இவ்வகைக் கலாசாரம் ஆன்மீகம் என்ற திரை போட்டு மறைக்கிறது. வாழ்க்கைத் தளத்தில் அல்லாது ஆன்மீகத் தளத்தில் மேற்குறித்த பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு இருப்பதாக அது பம்மாத்துச் செய்கிறது. உடல், உணர்ச்சிகள், சுய நலன்கள் ஆகியவற்றைக் கடந்த ஓர் உலகுக்குள் வருமாறு அது சகலரையும் அழைக்கிறது. சாதாரண மக்களுக்கு அது சாத்தியப்படாமற் போவதே சகல பிரச்சினைகளுக்கும் காரணம் என்றும் அது கூறுகிறது. ஆன்மீகக் கலாச்சாரம் அமைதியையும் நிம்மதியையும் சாந்தியையும் வழங்கும் என அது பிரச்சாரம் செய்கிறது. ஆன்மாவும் ஆன்மீகமும் உலகியல் ஈடுபாடற்ற, கட்டுப்பாடற்ற அதிகாரத்தின் புராதன வடிவங்கள். எந்தவிதக் கேள்விக்கும் இடமின்றிச் சகலவற்றையும் ஆன்மா தனக்கு அடிமையாக்கும். பிரத்தியட்ச வாழ்க்கைக்கு அருகில் வரப் பிடிவாதமாக மறுத்து, வாழ்வால் ஒவ்வொரு கணமும் தீண்டப்படும் மனம், அறிவு ஆகியவற்றை ஏற்க மறுக்கும் ஆன்மீகத் தத்துவங்களைச் சிலாகித்துப் பாராட்டும் நாடுகளில் பாசிசத்திற்கு வாய்ப்புண்டு என்றும் ஆன்மீகமயப்பட்ட சமூகத்தில் தனி மனிதர்கள் சர்வாதிகாரத்தை எளிதில் ஏற்றுக் கொள்ளுவர் என்றும் மார்க்யூஸ் கூறுவார். எனவே மனிதர்கள் தமது உணர்ச்சிகளைச் சமூக வரலாற்று யதார்த்தத்தோடும் சமூக மாற்ற நோக்கங்களோடும் இணைக்காமல் போகும் போது அவை பாசிசமாக உருவெடுக்கும் என்று மார்க்யூஸ் குறிப்பிடுகிறார்.

பாசிசம் இன்று புதிய முகங்களைத் தேடியபடி முதலாளித்துவ அதிகாரத்தின் ஒரு முகம் ஜனநாயகம் என்றால் அதன் மற்ற முகம் பாசிசம் ஆகும். ஜனநாயக வரையறைக்குள் தன் சுரண்டலை மேற்கொள்ளவும் அதிகாரத்தைத் தொடரவும் இயலாமற் போகும்போது அடக்குமுறையை வெளிப்படையாகக் கையாளும் நிர்ப்பந்தம் முதலாளித்துவத்துக்கு ஏற்படுகிறது. அப்போது அது தனது ஜனநாயகப் போர்வையைத் தூக்கி எறிந்துவிட்டு நேரடியான முதலாளித்துவ இராணுவ சர்வாதிகாரமாக மாறுகிறது.

தீவிர தேசியவாத உணர்வுகளைத் தூண்டுதல், சர்வாதிகாரம், அடக்குமுறை, வலதுசாரித் தன்மை, ஜனநாயக உரிமை மறுப்பு போன்றன அதன் பொதுவான இயல்புகளாகும். முகங்கள் மாறினாலும் இப் பண்புகளை எல்லாச் சூழ்நிலைகளிலும் காணலாம். முக்கியமாக எல்லா வேளைகளிலும் பாசிச அரசு நேரடியாகவே முதலாளித்துவ அதிகாரத்தின் பிரதிநிதியாகச் செயற்படும். பாசிசம் நாட்டுக்கு நாடு வேறுபட்ட வடிவங்களிலும் வேறுபட்ட வழிகள் மூலம் அதிகாரத்திற்கு வந்தாலும் இப் பண்புகள் மாறாமல் அப்படியே இருக்கும். இதைப் பழைய இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின் முதலாக 1960 முதல் 1980 வரை நீடித்த மூன்றாம் உலகின் பாசிசவாத ஆட்சிகளைக் கொண்டிருந்த சிலி, இந்தோனீசியா, தென் கொரியா, ஆர்ஜென்டீனா போன்ற பல நாடுகளிலும் காணலாம். அவற்றையொத்த தன்மைகளையுடைய பல “ஜனநாயக” நாடுகளை இன்றைய உலக ஒழுங்கிற் காணலாம்.

இன்று பாசிசம் ஜனநாயக முகமூடியை அணிந்தபடி வெற்றிகரமாக வலம் வருகிறது. கெடுபிடிப் போர்க் காலப்பகுதியிலும் அதைத் தொடர்ந்த ஒற்றை மைய உலக ஒழுங்கிலும் இயங்கிய பாசிச ஆட்சிகளுக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு எப்போதுமே இருந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தைப் பொறுத்த வரையில் தனது தேவைகளுக்கு ஆதரவானதாக பாசிச ஆட்சி இருக்குமிடத்து அதற்கு ஆதரவு வழங்கப் பின்னிற்பதில்லை. அதே வேளை ஒரு நாட்டில் பாசிசவாத ராணுவ ஆட்சியை உருவாக்குவதன் மூலமே தனது நலன்களைக் காக்க முடியும் என்ற நிலையில் அவ்வாறன ஆட்சியை உருவாக்கவோ வழிநடத்தவோ ஒருபோதும் தயங்கியதில்லை. இன்றைய உலக ஒழுங்கிலும் இந்நிலையே தொடர்கிறது.

அரசியல் நெருக்கடி, பொருளாதார மந்தம், தலைமை இல்லாமை, முற்போக்கு சக்திகளிடையே ஐக்கியமின்மை ஆகியன மக்கள் நடுவே தோற்றுவிக்கும் விரக்தி உணர்வு பாசிசவாதிகட்கு மிகவும் பயன்படுகிறது. இதை எவரையும் விடச் சரியாகப் பாசிசவாதிகளே பயன்படுத்துகிறார்கள். ஒரு சமூகமாக ஒவ்வொரு சமூகமும் கவனத்தில் எடுக்கவேண்டிய அம்சம். அவ்வாறான பாசிசப் போக்குக்கள் உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு சமூகத்தினதும் கடமை. தவறுமிடத்துச் சமூகமாகப் பல அவலங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதை உறைக்கும்படி வரலாறு பலமுறை உணர்த்தியிருக்கிறது.

ஐரோப்பிய பாசிசம் பற்றிய அனுபவம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் மக்கள் அது பற்றி மிகவும் விழிப்புடன் இருக்கின்றனர். ஆயினும் பொருளாதார நெருக்கடி, வேலையின்மை போன்ற பிரச்சினைகள் மோசமாகும்போது, பாசிச சக்திகள் தலையெடுக்கின்றன. குறிப்பாக ஜரோப்பாவில் உள்மறைந்திருந்த பாசிசக் கூறுகள் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராகவும் வந்தேறுகுடிகளுக்கு (குறிப்பாக ஆசியர்களுக்கு) எதிராகவும் வெளிப்பட்டதை பார்க்க முடியும்.

ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் இந்த விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். காலனித்துவ ஆட்சியின் தொடர்ச்சியாகப், பணிந்துபோகும் மனப்பாங்கு தலைமுறைகள் தாண்டியும் விதைக்கப் பட்டிருப்பதால் அடிப்படையான உரிமை மறுப்பும் அடக்குமுறையும் பாரிய எல்லையை எட்டும் வரை, அவை மக்களுக்குப் பிரச்சனைகளாகத் தெரிவதில்லை. அவை பிரச்சனைகளாகத் தெரியத் தொடங்கும் போது பாசிசம் தன்னை உறுதியாக நிலைநிறுத்தியிருக்கும். இந்நிலையில் மிகச் சிறிய எதிர்ப்போ மாற்றுக் கருத்தோ சகித்துக் கொள்ளப்பட மாட்டாது.

நிறைவாக பாசிசம் என்பது முதலாளிய சமூகத்தின் மிக உக்கிரமான வடிவம். ஆரம்பகால முதலாளியம் தனிமனித, சிறுமுதலாளியப் போட்டிகட்குத் தனக்குள் இடமளித்தது. ஆனால் பாசிசமோ ஏகபோக நிதிமூலதன முதலாளியம். அது உள் முரண்பாடுகளைச் சகித்துக் கொள்ளாமல் ஒரு மொத்தத்துவ (totalitarian) சர்வாதிகார வடிவை எடுக்கிறது. உள் முரண்பாடுகளை அழிப்பதற்காகத் தேசம், இனம், நாடு என்பது போன்ற ஒட்டுமொத்த அடையாளங்களைப் பாசிசம் பயன்படுத்திக் கொள்கிறது. சமூக முழுமையின் “ஒழுங்கைக்” காப்பதற்காகத் தனி மனித சுதந்திரம், உரிமைகள் ஆகியவற்றைப் பாசிசம் ஒடுக்குகிறது. அறிவையும் சமூக இலட்சியங்களையும் பொய்யென அறிவித்து இன உணர்ச்சிகளை மட்டும் மனிதர்களின் மரபு என்றும் சொந்த இருப்பு என்றும் பாசிசம் கூறுகிறது. கற்பனாவாத (utopian) உறுதி மொழிகள் சிலவற்றை அது வழங்குகிறது. இனம், மதம், தேசியம் போன்ற ஒரு பேரடையாளத்தைப் பற்றி அது பேசுகிறது. பாசிசம் இக்கூறுகளை ஒரு பண்பாட்டு இணைவாக்கத்துக்கு (cultural synthesis) உட்படுத்துகிறது. இப்பண்பாட்டு இணைவாக்கம் பாசிசக் கருத்தியலுக்கு வெகுசன ஆதரவைத் திரட்டவல்லதாக உள்ளது. இந்த ஆதரவு பாசிச ஆட்சி தன்னை நிலைநிறுத்தப் பெரிதும் உதவுகிறது.

எதிர்ப்புகள் பாசிசத்தால் மிகக் கவனமாக் கட்டுப்படுத்தப்படுகின்றன. நெருக்கடிகளும் வேலை நிறுத்தங்களும் அரசுக்கு எதிரான போராட்டங்களும் தேசியத்தை, நாட்டைப் பலவீனப் படுத்துவதாக பாசிசம் கூறுகிறது. எனவே பலம் கொண்ட நாடாக உருவாவதற்கு சர்வதேசப் பொருளாதார, ராணுவப் போட்டியில் நாடு வெற்றி பெறுவதற்கு இது அவசியம் என பாசிசம் பிரச்சாரம் செய்கிறது. இதன் அடிப்படையில் பாசிசம் இன்றும் உலகில் வெற்றிகரமாகக் கோலோச்சுகிறது. அதற்கெதிராக போராடுவது அவசியமாகிறது. அப்போராட்டம் பரந்துபட்ட மக்கள் ஜக்கியத்தின் மூலம் மட்டுமே இயலும்.



விமர்சனம்

பாசிசத்தினை ஒரு தத்துவமாக ஏற்றுக் கொள்ள முடியுமா என்ற வாதப்பிரதிவாதங்கள் காணப்படுகின்றன. ஒரு தத்துவம் எனக் கூறுவதை விட அரசியல் சந்தர்ப்பவாதம் எனக்கூறுவதே பொருத்தமானதாகும். அதிகார வெறிபிடித்த தலைமைத்துவம் தனது அமைப்பின் நலனை நோக்கமாக கொண்டு செயற்படுகிறது. இதன் மூலம் ஜனநாயக தத்துவம் செயலிழக்கச் செய்யப்படுகிறது. தனிமனித சுதந்திரம், எதிர்கருத்துக்கள் சுதந்திரமான நீதித்துறை செயற்பாடு என்பன தடை செய்யப்பட்டன. தேர்தல்கள் என்பதற்கோ மக்கள் அபிப்பிராயத்திற்கோ இங்கு இடமளிக்கப்படுவதில்லை. தாராண்மைவாத தத்துவம் ஜனநாயகம் தனிமனிதவாதம் என்பவற்றை பாதுகாக்க எதேச்சாதிகாரம் வரம்பற்ற ஆட்சி என்பவற்றை பாசிசம் பாதுகாக்கிறது. பாசிசம் சோசலிசத்திற்கும் எதிரானதாகும். தொழிலாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளை ஒடுக்கும். அதே நேரம் முதலாளித்துவத்தின் நலன்களை பாதுகாக்க முற்படுகின்றது. சர்வதேசியத்தினையும் பாசிசம் நிராகரிக்கிறது. அதே நேரம் ஆக்கிரமிப்பு தேசிய வாதத்தினை முழுமையாக அங்கீகரிக்கின்றது. யுத்தம் என்பதை அங்கீகரிக்கின்ற அதே நேரம் சமாதானத்தினை இழிவுபடுத்துகிறது. இன மேலாதிக்க கற்பனையினை ஏற்றுக் கொண்டு ஏனைய இனங்களையும் தேசியங்களையும் இழிவுபடுத்தி அழிக்க பாசிசம் முற்படுகிறது. ஆயினும் குறிப்பிட்ட காலம் பாசிசம் ஒரு தத்துவமாக செயற்பட்டதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உலகின் வரலாற்றுப் நிகழ்வினை தீர்மானித்ததில் குறிப்பிடக் கூடியளவிற்கு பங்காற்றியது. இதன் மூலம் வரலாற்றில் பாசிசம் தனக்கென ஓரிடத்தை ஒதுக்கி வைத்துள்ளது.



இரண்டாம் உலகப் போர்

பாசிச இத்தாலி மற்றும் நாஜி ஜெர்மனியில் முசோலினி மற்றும் ஹிட்லர் இருவரும் 1930 - 1940 களில் பிராந்திய விரிவாக்க மற்றும் வெளியுறவு கொள்கை தலையீட்டுவாத நிகழ்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்தனர். இத்திட்டங்களின் மூலம் இரண்டாம் உலகப்போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.

முசோலினி இத்தாலிய கோரிக்கைகள் மீட்கப்பட வேண்டும், மத்தியதரைக் கடலின் இத்தாலிய மேலாதிக்கத்தை நிறுவுதல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இத்தாலிய அணுகளைப் பெறுதல், மத்தியதரைக் கடல் மற்றும் செங்கடலில் உள்ள இத்தாலிய ஸ்பேசியோ வைடால் ("முக்கிய இடம்") ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்று கோரினார். சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளான ஜெர்மனியர்களால் காலனித்துவப்படுத்தப்படும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மன் லெபென்ஸ்ராம் "வாழும் இடம்" உருவாக்கப்பட வேண்டும் என்று ஹிட்லர் கோரினார்.

1935 முதல் 1939 வரையான காலப்பகுதியில், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகள் தங்கள் கோரிக்கைகளை பிராந்திய கூற்றுக்கள் மற்றும் உலக விவகாரங்களில் பெரும் தாக்கத்தை அதிகப்படுத்தியது. 1936-இல் ஜெர்மனி தொழில்துறை ரைன்லேண்ட் மறுமதிப்பீடு செய்யப்பட்டது. வெர்சாய் உடன்படிக்கையால் இந்த பிராந்தியத்தை தளர்த்தப்பட்டது. 1938-ம் ஆண்டு ஜெர்மனியை சுடபென்லாந்துக்கு வழங்கிய முனிச் ஒப்பந்தத்தை ஏற்பாடு செய்ததன் மூலம் செக்கோஸ்லோவாக்கியா மீது பிரிட்டன் மற்றும் பிரான்சுக்கு இடையேயான இராஜதந்திர நெருக்கடியை தீர்ப்பதில் ஜேர்மனிக்கு உதவிய ஆஸ்திரியா மற்றும் இத்தாலி ஆகியவை ஜெர்மனிக்கு உதவியதுடன், அந்த நேரத்தில் ஒரு ஐரோப்பிய போரைத் தடுத்தது. இரண்டாம் உலகப் போரின் போது, நாசி ஜெர்மனியின் தலைமையில் ஐரோப்பாவில் உள்ள ஆக்சஸ் அதிகாரங்கள் மில்லியன் கணக்கான போலந்து, யூதர்கள், ஜிப்சீஸ் மற்றும் இதர இனப்படுகொலைகள் ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்பட்டன.

1942-க்குப் பிறகு, அச்சுப் படைகள் புதையுண்டன. இத்தாலியில் பல இராணுவத் தோல்விகளை எதிர்கொண்ட பின்னர், இத்தாலியின் நேச நாடுகள் படையெடுப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்வதேச அவமானம், முசோலினி அரசாங்கத்தின் தலைவராக அகற்றப்பட்டு, கிங் விக்டர் இம்மானுவல்-III இன் கட்டளையால் கைது செய்யப்பட்டார். அவர் பாசிச அரசை அகற்றுவதற்காகவும், கூட்டணி படைக்கு விசுவாசத்தை நிலைநிறுத்தியது.

முசோலினி கைது செய்யப்பட்டு ஜெர்மன் படைகளால் காப்பாற்றப்பட்டு 1943 முதல் 1945 வரை ஜேர்மனிய அரசான இத்தாலிய சமூகக் குடியரசை வழிநடத்தினார். 1943 முதல் 1945 வரை நாஜி ஜேர்மனி பல இழப்புக்கள் மற்றும் நிலையான சோவியத் மற்றும் மேற்கத்திய நட்புரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டது.ஏப்ரல் 28, 1945 அன்று, முசோலினி இத்தாலிய கம்யூனிஸ்ட் பிரிவினைவாதிகளால் கைப்பற்றப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். 30 ஏப்ரல் 1945 அன்று ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்

உலகை உலுக்கிய சர்வாதிகாரிகள் பட்டியலில், ‘பாசிசம்' என்ற சித்தாந்தத்தில் பெனிட்டோ முசோலினிக்கு நிரந்தர இடம் உண்டு. 1922 முதல் 1943 வரை இத்தாலியை ஆண்ட முசோலினி, ஹிட்லருடன் இணைந்து இரண்டாவது உலகப் போரில் இறங்கியவர். வட மத்திய இத்தாலியின் பிரிடாபியோ பகுதியில் 1883 ஜூலை 29-ல் பிறந்தார் முசோலினி. அவரது தந்தை அலெசாந்த்ரோ முசோலினி, சோஷலிசத்தால் ஈர்க்கப்பட்டவர். மெக்ஸிகோ அதிபர் பெனிடோ யுவரோஸ், இத்தாலிய சோஷலிஸ்டுகளான ஆமில்கேர் சிப்ரியானி, ஆண்ட்ரியா கோஸ்டா ஆகியோரின் பெயர்களை இணைத்துத் தனது மகனுக்கு ‘பெனிடோ ஆமில்கேர் ஆண்ட்ரியா முசோலினி' என்று பெயர் சூட்டினார்.



கோர முடிவு

லிபியாவையும் அபிசீனியாவையும் மீட்ட நேச நாடுகள், 1943-ல் இத்தாலி மீது படையெடுத்தன. ரோம் நகரின் மீது குண்டுகளை வீசின. அந்த ஆண்டு ஜூலை 25-ல் மன்னர் விக்டர் இம்மானுவேல், முசோலினியைக் கைது செய்து பல்வேறு ஊர்களில் சிறை வைத்தார். ஜெர்மானிய கமாண்டோக்கள் அவரை மீட்டுத் தங்கள் ஆக்கிரமிப்பில் இருந்த வடக்கு இத்தாலியில் தங்க வைத்தனர். அங்கிருந்துகொண்டு பொம்மை (இத்தாலிய) அரசின் அதிபராகத் தன்னைக் காட்டிக்கொண்டார் முசோலினி. 1945 ஏப்ரல் 27-ல் ஜெர்மானிய ராணுவ அதிகாரியைப் போல மாறுவேடமிட்டு, சுவிட்சர்லாந்துக்குச் செல்ல முயன்றபோது, இத்தாலியைச் சேர்ந்த அரசு எதிர்ப்புப் படை வீரர் ஒருவரால் அடையாளம் காணப்பட்டார்.

அடுத்த நாளே மிலன் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு, மக்கள் கூடும் சதுக்கத்தில் பெரிய கம்பத்தில் கட்டித் தொங்க விடப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி கிளாரா பெட்டாசி, அவளுடைய தம்பி மார்செலோ பெட்டாசியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவரது அமைச்சர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இதே கதிதான் ஏற்பட்டது.

முசோலினிக்கு ஏற்பட்ட இந்தக் கதி ஹிட்லரின் காதுகளை எட்டியது. பெர்லின் நகருக்குள் சோவியத் துருப்புகள் நுழைந்துவிட்டன என்று கேள்விப்பட்டதும் மனைவி ஈவா பிரௌனைச் சுட்டுக்கொன்றுவிட்டு, விஷம் குடித்ததுடன் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்தார் ஹிட்லர். இரு சர்வாதிகாரிகளின் வாழ்வும் இப்படியாக முடிவுக்கு வந்தது.​



தொடரும்...


No comments:

Post a Comment