சோம்பேறியாக இருந்ததால்தான் எழுத்தாளனானேன். அதற்காக வருத்தமெதுவுமில்லை. மகிழ்ச்சிதான். என்னுடைய புத்தகங்கள் எல்லாம் சின்னச் சின்ன புத்தகங்கள்தான். விலையும் ரொம்ப மலிவு. மக்களுக்கு வாங்குவதிலும் சிரமமிருக்காது. இங்குள்ள இந்துக்களும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இதை வாங்குகிறார்கள். ஆகவே பெரிய அல்லலில்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். யாருமே புத்தகம் வாங்காமலிருந்தால் நான் வேறு வேலை பார்ப்பேன். எனக்கு வேலி போடத் தெரியும். நிலம் உழத் தெரியும். தென்னை மரமேறுவேன். தூண்டில் போட்டு மீன் பிடிக்கத் தெரியும். சமையல் வேலை செய்வேன். வீடுகளிலோ ஓட்டல்களிலோ குக்காக வேலை பார்க்கலாம். சினிமா நடிகன் ஆகியிருக்கலாம். அரசு உத்தியோகம் பார்த்திருக்கலாம். இப்போது ஒருவேளை பத்திரிகை ஆசிரியனாகவும் ஆகலாம்.வாய்ப்பு வந்திருக்கிறது. இரண்டாயிரமோ மூவாயிரமோ மாதச்சம்பளம் தருகிறோமென்று சொன்னார்கள். நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே, நான் ஒரு சோம்பேறி. நேர ஒழுங்குமுறை கிடையாது. நான் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது கூட எந்த ஒரு ஒழுங்குமுறையும் இல்லாமல்தானே ? தோன்றும் போது எழுவேன். தோன்றும் போது குளிப்பேன். தோன்றும் போது சாப்பிடுவேன். சில நாட்கள் குளிக்காமலும் இருப்பேன். சில நாட்கள் பகலில் எழாமலும்கூட இருந்துவிடுவேன். சோம்பேறிகளுக்கும் சோம்பேறிணிகளுக்கும் ஏற்ற ஒரேயொரு தொழில் எழுத்துத் தொழில்தான் என்பதை மீண்டுமொரு முறை அழுத்திச் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சுய மரியாதையுமிருக்கும். நான் யாருக்கும் அடிமையில்லை. சுதந்திரமானவன். பரந்து விரிந்த இந்த நிலத்தில், இறைவனின் இந்தப் பூமியில், மர நிழலில் நான் அமர்ந்திருக்கிறேன். தோன்றும்போது சிறிது சங்கீதம் கேட்பேன். இது ஒரு அனுக்கிரகம். புண்பட்ட மனத்திற்கு ஒரு சாந்தி. நான் இறந்த பிறகு என்னை இந்த மரத்தின் கீழ்தான் மறைவு செய்யவேண்டுமென்று மனைவியிடமும் பிள்ளைகளிடமும் சொல்லியிருக்கிறேன்.
வைக்கம் முஹம்மது பஷீர் ❤️
No comments:
Post a Comment