audio

https://vocaroo.com/media_command.php?media=s1tr6G3wF9DU&command=download_mp3

Tuesday, June 13, 2023

பிறரிடம்_பேசும்_கலை

 "#பிறரிடம்_பேசும்_கலை..."


இதை ஒருமுறை பொறுமையாக வாசியுங்கள். பிறரிடம் நீங்கள் பேசும் விதம் நிச்சயமாக மாறும். அதுவும் நல்ல விதமாக மற்றும் சிறப்பானதாக மாறும். 


1. புறம் பேசாதீர்கள்:


பிறர் பற்றி புறம் பேசுதல் என்பது மிகவும் தவறான மற்றும் இழிவான செயல். 


"அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்

புறங்கூறா னென்றல் இனிது." 

என்கிறார் வள்ளுவர்.


அதாவது நீங்கள் உண்மையைக்(அறம்) கூட பேசாமல் இருக்கலாம் ஆனால், பிறரைப் பற்றி புறம் மட்டும் பேசாதீர்கள் என்கிறார். 


யாரைப் பற்றி யாரிடமும் நீங்கள் புறம் பேசாமல் இருங்கள். அது மிகப்பெரிய தவறு என்பதை உணருங்கள். 


2. பிறர் புறம் பேசினால்:


யாராவது உங்களிடம் பிறரைப் பற்றி புறம் பேசினால், புறம் பேசுவது தவறு என்பதை சுட்டிக் காட்டுங்கள் அல்லது அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லுங்கள். 


அவர்கள் பேசுகிறார்கள் என்பதற்காக நீங்களும் அவர்களோடு சேர்ந்து புறம் பேசாதீர்கள். 


3. தன் குற்றம் அறிதல்:


இதற்கு முன் நீங்கள் பிறரை புறம் பேசியதை சிந்தித்துப் பாருங்கள். அது தவறு என்பதை உணருங்கள். 


இனி பிறர் பற்றி புறம் பேசவே மாட்டேன் என்று உறுதியெடுங்கள். 


உங்கள் தவறை முதலில் நீங்கள் உணருங்கள்.   


"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு."  

என்கிறார் வள்ளுவர். 


அதாவது, பிறரது குற்றங்களை புறம் பேசுவதற்கு முன் உங்கள் குற்றங்கள் என்ன என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தால் எந்த உயிருக்கும் தீங்கு விளையாது என்கிறார். 


4. கண்டித்தல்:


பிறர் தவறு செய்தால் அதை சுட்டிக் காட்டுவது, அதைப்பற்றி பேசுவது தவறா? என்று உங்களுக்குத் தோன்றலாம். அதற்கான விளக்கம் இதோ,


"கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க

முன்னின்று பின்நோக்காச் சொல்."  


ஒருவரின் கண்ணிற்கு நேராக கடுமையாக அவரது தவறை சுட்டிக் காட்டுவதில் எந்தவொரு தவறும் இல்லை. அவரை முன்னே போகவிட்டு பின்னால் பேசுவது தான் இழிவான செயல் என்கிறார் வள்ளுவர். 


5. விலகியே இருங்கள்:


ஒருவரின் தவறை நீங்கள் சுட்டிக் காட்டுவது தவறில்லை. அந்தத் தவறை அவர் செய்தாரா? என்பதை அவரிடமே பேசி உறுதிப்படுத்துங்கள். 


அல்லது தீர விசாரித்துவிட்டு அவரிடம் சென்று நேருக்கு நேராக அவருடைய தவறைப் பற்றி பேசுங்கள், கேள்வி கேளுங்கள் அதுவே முறையாக இருக்கும். 


எந்தவொரு காரணத்திற்காகவும் யாரைப் பற்றியும் புறம் பேசாதீர்கள். 


புறம் பேசும் நபர்கள், அரசியல்வாதிகள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என எதுவாக இருந்தாலும் அதிலிருந்து நீங்கள் விலகியே இருங்கள். 


6. நல்லதை மட்டும் பேசுங்கள்:


பிறரிடம் இருக்கும் நல்ல குணங்களைப் பற்றியும், பிறர் செய்யும் நல்ல செயல்களை பற்றியும் பேசுங்கள்.


"நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்ற

பண்பின் தலைப்பிரியாச் சொல்."


பயன்கருதி பக்குவமாகப் பேசப்படும் நல்ல வார்த்தை, நன்மை தருவதுடன், நன்றி உணர்வையும் கொடுக்கும் என்கிறார் வள்ளுவர். 


எனவே,


நல்லதை மட்டும் பேசுங்கள்!

நல்லதைப் பாராட்டுங்கள்!

நல்லதைக் கொண்டாடுங்கள்!


நல்லதே நடக்கும்.



No comments:

Post a Comment